கல்லூரிகளில் பருவத்தேர்வு ரத்து : கடந்த செமஸ்டருக்கான மதிப்பெண் கணக்கீடு எப்படி ?
கொரோனா பேரிடர் காரணமாக, கல்லூரிகளில் பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண் எப்படி கணக்கிடப்பட உள்ளது என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், இறுதியாண்டு மாணாக்கர்கள் தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம், யுஜிசி வழிமுறைப்படி மதிப்பெண் வழங்கி, அடுத்த ஆண்டுக்கு மாணாக்கர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்து பல்கலைக்கழக மானியக் குழு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
முந்தைய நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு மதிப்பெண்ணில் இருந்து 50 சதவீதமும், ஏப்ரல் - மே மாதத்துக்கான செமஸ்டரின் இன்டர்னல் மதிப்பெண்களில் இருந்து 50 சதவீதமும் சேர்த்து கணக்கிட வேண்டும் என்று UGC வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வை ஒரு மாணவர் எழுதாமல் இருந்திருந்தால், முழுமையாக ஏப்ரல் - மே மாத செமஸ்டரில் எடுத்த இன்டர்னல் மதிப்பெண்களைக் கொண்டு மதிப்பெண்களை வழங்கலாம் என்றும் UGC தெரிவித்துள்ளது.
இன்டர்னல் மற்றும் முந்தைய செமஸ்டர் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் மதிப்பெண்களில் மாணவர்களுக்கு திருப்தி இல்லையென்றால், சூழல் சரியான உடன் நடத்தப்படும் சிறப்புத் தேர்வில் பங்கேற்று மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அந்த மதிப்பெண்களே இறுதியானதாக கருதப்படும் என்றும் UGC தெரிவித்துள்ளது.
சூழல் சரியான உடன், நடத்தப்படும் சிறப்புத் தேர்வுடன், அரியர் தேர்வுகளும் நடத்தப்படும் என்பதால் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அப்போது எழுதி தேர்ச்சி பெறலாம் என்றும் UGC தெரிவித்துள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே அரசின் செமஸ்டர் தேர்வு ரத்து என்ற அறிவிப்பு பொருந்தும் என்றும், மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்வது தொடர்பான முடிவை இந்திய மருத்துவக் கவுன்சில் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments