தீவிரவாதிகளுக்கு ஆயுத சப்ளை செய்யும் சீனா.. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் கிளர்ச்சியை உருவாக்க சதியா?
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள நாடுகளான மியான்மர் - தாய்லாந்து நாட்டின் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளிடத்தலிருந்து ஏராளமான சீன நாட்டுத் தயாரிப்பு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மியான்மருக்குத் தப்பி ஓடியுள்ளனர். அங்குள்ள உள்ள ராகினி மாணாகத்தில் இந்த தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போன்று, மியான்மரில் அரசுக்கு எதிராகப் போராடும் அரகன் கிளர்ச்சியாளர்களும் இங்குதான் தங்கியுள்ளனர். இந்த தீவிரவாதிகள் மியான்மருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் நீண்டகாலமாகவே அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாய்லாந்து நாட்டில் உள்ள ’மா டியோ’ என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய ஏராளமான, அதி நவீனத் துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள் உள்ளிட்ட சீனத் தயாரிப்பு ஆயுதங்கள் தாய்லாந்து நாட்டு ராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இந்தத் தகவல் கிடைத்த உடனே தாய்லாந்துக்கான இந்தியத் தூதர் சுசித்ரா துரை அந்த நாட்டின் டக் மாகாண ஆளுனரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மர் நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்கள் அவர்களுக்கு உதவி செய்யும் சீனா குறித்து நீண்ட காலமாகவே ஆராய்ச்சி செய்து வரும், அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டர்ஸ் கோர், "மியான்மரில் இயங்கும் தீவிரவாதிகளுக்கு சீனா பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்குகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு சட்ட விரோதமாக நவீன ஆயுதங்களை வழங்கி மியான்மர் மற்றும் இந்தியா மீது ராஜதந்திர பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மியான்மரில் உள்ள ராகினி பகுதிகளில் பிரச்னையை ஏற்படுத்தி தனது செல்வாக்கைப் பலப்படுத்திக்கொள்ள சீனா முயற்சி செய்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுவரை மறைமுகமாகக் கிளர்ச்சியாளர்களுக்கு உதவிசெய்துவந்த சீனா இப்போது நவீன ஆயுதங்களையும் கொடுக்கத் தொடங்கிவிட்டது. இது மியான்மரில் மட்டுமல்லாமல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதியற்ற தன்மையை உருவாக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...
Comments