ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடமை ஆக்கப்பட்டது

0 9230
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடமை ஆக்கப்பட்டது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லம், அரசு உடைமை ஆனது. இதற்காக, சம்மந்தப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க, 68 கோடி ரூபாயை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை அறிவித்த உயர்நீதிமன்றம், போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முன், அவர்களின் கருத்துக்களை கேட்டு, உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

மேலும், வேதா நிலையத்தை கையகப்படுத்துவதற்கு வழங்கும் தொகையில், வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36.9 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்தி விடுவதாக தமிழக அரசு கூறியிருந்தது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் 67.90 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

வேதா நிலையத்தை வாங்குவதற்கான விலையை நிர்ணயம் செய்து தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நில கையகப்படுத்துதல் சட்டத்தின் அடிப்படையில் ஒரு சதுர அடி 12,060 ரூபாய் வீதம் 24,322 சதுர அடி நிலத்திற்கு 29.3 கோடி ரூபாய் என அடிப்படை மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

இதுதவிர கட்டிட மதிப்பு 2.73 கோடி ரூபாய், மரங்களின் மதிப்பு, 100 சதவீத இழப்பீடு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு, நீதிமன்றத்தில் இழப்பீட்டுத் தொகையாக 67.90 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. இதை அடுத்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் இன்று முதல் அரசுடைமையானது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே சட்டப்பேரவையில் அறிவித்தபடி, வேதா இல்லம் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும்.

நினைவு இல்லத்தின் ஒரு பகுதியை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற பரிந்துரை நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால், நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments