வனத்துறை ஊழியர்களின் ஆர்வக் கோளாறு... கொடைக்கானலில் பரோட்டா சூரி, விமல் சிக்கியது இப்படித்தான்!

0 17080
நடிகர்கள் சூரி மற்றும் விமலுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரபு மற்றும் செல்வம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையிலிருந்து நடிகர்கள் பரோட்டா சூரி, விமல் ஆகியோர் கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். ஜூலை 17- ந் தேதி கொடைக்கானல் நகரப்பகுதியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்துக்குள் உள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள வனத்துறை விடுதியிலும் இரவு தங்கியிருக்கின்றனர். அடுத்த நாள் காலை பரோட்டோ சூரி, விமல் ஆகியோர் ஏரியில் மீன் பிடித்துள்ளனர். அதை போட்டோவும் எடுத்துள்ளனர். பாரோட்டா சூரியும் விமலும் நடிகர்கள் என்பதால், அவர்களுக்கு உதவி செய்த வனத்துறை ஊழியர்கள் பிரபுவும் செல்வமும் இருவருடனும் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்துள்ளனர்.

பின்னர், நடிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை பெருமையுடன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் நடிகர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றது வெளியுலகுக்கு இப்படித்தான் தெரிய வந்தது. இதையடுத்து, கொடைக்கானலைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் போலீஸில் புகாரளிக்க சர்ச்சை வெடித்தது. பேரிஜம் வனப்பகுதிக்குள் தடையை மீறி சென்ற பரோட்டா சூரி, விமல் உள்ளிட்டவர்களுக்கு தலா 2,000 அபராதம் விதிக்கப்பட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தடையை மீறி தமிழ் நடிகர்களை ஏரி இருந்த பகுதிக்குள் அனுமதித்த வனத்துறை ஒப்பந்த ஊழியர்கள் சைமன், பிரபு, செல்வம் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

கொடைக்கானலுக்குள் சூரி, விமல் வந்தது குறித்து சோதனை சாவடியில் ஆய்வு நடத்தினர். வாகன வருகை பதிவேடு மற்றும் சி. சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் கடந்த 15 ம் தேதி 2 மணிக்கு சூரியின் டொயோட்டா இன்னோவா காருடன் மற்றும் சென்னை பதிவெண் கொண்ட மேலும் இரண்டு வாகனங்கள் கொடைக்கானலுக்குள் நுழைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மீண்டும் 20 - ந் தேதி மாலை இந்த கார்கள் கொடைக்கானலை விட்டு வெளியேறியுள்ளன.

image

இந்த நிலையில் ,கொடைக்கானல் ஆர்.டி.ஓ சிவக்குமார் பரோட்டா சூரி, விமல் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய டி.எஸ்.பி ஆத்மநாதனிடம் பரிந்துரைத்துள்ளார் . ஊரடங்கு காலத்தில் 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூடியது. பேரிடர் காலத்தில் கொடைக்கானல் நகருக்குள் தடையை மீறி நுழைந்தது. நோய்த் தொற்றைப் பரப்பும் விதத்தில் நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளில் பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய டி. ஆர். ஓ. சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் மீது போலீஸாரும் விரைவில் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த மே மாதத்தில் கல்லுகுளி பகுதியை சேர்ந்த 7 இளைஞர்கள் பேரிஜம் பகுதிக்குள் சென்றுள்ளனர். வனத்துறையினரிடத்தில் சிக்கிய இவர்களுக்கு ரூ. 40, 000 வரை வரை அபராதம் விதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடத்தில் கேட்ட போது, ''கல்லுக்குளி இளைஞர்கள் காட்டு நாய் தாக்கி இறந்த காட்டுப்பன்றியின் உடலை எடுத்து வந்தனர். இதனால், அவர்களுக்கு தலா ஒருவருக்கு 30,000 வீதம் மொத்தம் ரூ. 2,10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. நடிகர்கள் என்பதால் பாரோட்டா சூரிக்கும் விமலுக்கும் சலுகை காட்டவில்லை '' என்று தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments