'பாலியல் கல்வி கற்றுக் கொடுக்க விரும்பினால், அதை உங்கள் வீட்டுக்குள் செய்திருக்க வேண்டும்!'- ரெஹானாவுக்கு நீதிமன்றம் குட்டு
சபரிமலைக்கு செல்ல முயன்று சர்ச்சையில் சிக்கியவர் கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா. பெண் செயற்பாட்டளராக தன்னை கூறிக் கொள்ளும் ரெஹானா பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி வந்தார். சபரிமலைக்கு அனைத்து வயது பெண்கள் செல்லாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவரும் சபரிமலை செல்ல முயன்றார். ஆனால், பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக அவரால் சபரிலை செல்ல முடியாமல் பாதியிலேயே திரும்பிவிட்டார்.
இந்த சமயத்தில் தன்னை ஐயப்ப பக்தையாக காட்டிக் கொள்வதற்காக ஃபேஸ்புக்கில் இவர் பகிர்ந்த புகைப்படம் ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தியது. இந்த விவகாரத்தில்,பத்தனம்திட்டா போலீஸார் வழக்குப்பதிவு செய்து 2018- ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரெஹானா பாத்திமாவை கைது செய்தனர். தொடர்ந்து , அரசு ஊழியருக்கான விதிமுறைகளை மீறியதாகவும் மத நம்பிக்கையை நிந்திக்கும் வகையில் நடந்து கொண்டதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் இவரை டிஸ்மிஸ் செய்தது. ஆனாலும், பி.எஸ்.என். எல் நிறுவனத்தின் குடியிருப்பிலேயே இவர் தன் பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் ரெஹானா ஃபேஸ்புக்கில் மற்றோரு பதிவை வெளியிட்டார். பெண் உடலும்,அரசியலும் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட பதிவில் அரை நிர்வாண நிலையிலிருந்த ரெஹானாவின் உடலில் அவரின் மைனர் குழந்தைகள் ஓவியம் வரைவது போன்ற புகைப்படம் அதில் இடம் பெற்றிருந்தது. ரெஹானாவின் இந்த செயலால், கேரளாவில் சர்ச்சையை கிளப்பியது. ரெஹானாவுக்கு குழந்தைகள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தொடர்ந்து, திருவல்லா போலீஸார் ரெஹானா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க கேரள உயர்நீதிமன்றத்தில் ரெஹானா முன் ஜாமின் கேட்டு நேற்று மனு செய்திருந்தார். அதில், ' என் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்கவே என் உடலில் ஓவியத்தை வரைய செய்தேன். குழந்தைகளுக்கு பாலியல் குறித்த புரிதல் அவசியம் 'என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், மனுவை விசாரித்த நீதிபதி உன்னிகிருஷ்ணன் . 'குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்றுக் கொள்ள விரும்பியிருந்தால் அதை உங்கள் வீட்டுக்குள் செய்திருக்க வேண்டும். சமூகவலைத் தளங்களில் வெளியிட்டது ஏன்' என்று கேள்வி எழுப்பியதுடன் ரெஹானா பாத்திமாவின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
முன்ஜாமீன் மறுக்கப்பட்டிருப்பதால், எப்போது வேண்டுமானாலும், ரெஹானா பாத்திமா கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments