சொகுசு பங்களாவில் வாயில் டேப்பை கட்டி பெண் மானபங்கம்..! கொள்ளையர்கள் அட்டூழியம்

0 22319
மாமல்லபுரம் அருகே சொகுசு பங்களாவில் புகுந்து காவலாளி குடும்பத்தை கட்டிப்போட்டு, பெண்ணை மானபங்கப்படுத்தி நகை- பணம் பறித்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

மாமல்லபுரம் அருகே சொகுசு பங்களாவில் புகுந்து காவலாளி குடும்பத்தை கட்டிப்போட்டு, பெண்ணை மானபங்கப்படுத்தி நகை- பணம் பறித்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த விளம்பர படத் தயாரிப்பாளர் வைஜெயந்தி என்பவருக்கு சொந்தமான சொகுசு பங்களா ஒன்று மாமல்லபுரத்தில் உள்ளது. விருந்தினர்கள் தங்கிச் செல்லும் வகையில் சகல வசதிகளுடன் இந்த பங்களா செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த சொகுசு பங்களாவின் காவலாளி ராஜேந்திரன் என்பவர், இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் சிறிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று மாலை 6 மணியளவில் அந்த சொகுசு பங்களாவின் பின்பக்கம் உள்ள மரத்தின் மீது ஏறி உள்ளே புகுந்த கொள்ளையர்கள், காவலாளி ராஜேந்திரனை கத்தியால் தாக்கி விட்டு, வீட்டில் இருந்த அவரது மாமனார் மற்றும் குழந்தைகளை பேக்கேஜிங் டேப்பால் வாய், கை,கால்களைக் கட்டி ஒரு அறைக்குள் போட்டு அடைத்துள்ளனர்.

காவலாளியின் மனைவியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று ஒவ்வொரு அறையாக திறக்க வைத்துள்ளனர். அந்த பங்களாவில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட சொகுசு அறைகளை சல்லடை போட்டுத் தேடியும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால், ஆத்திரத்தில் அங்கிருந்த டிவியை அடித்து உடைத்துள்ளனர்.

காவலாளியின் மனைவியின் ஆடைகளைக் கிழித்து மானபங்கப்படுத்தியதுடன், அவரிடம் இருந்து ஒரு சவரன் தங்க கம்மலைப் பறித்துள்ளனர். காவலாளியின் வீட்டுக்குள் சென்று குழந்தையின் வெள்ளிக் கொலுசு, தங்கச் சங்கிலி, வீட்டில் இருந்த மின்சார அடுப்பு ஆகியவற்றை தூக்கிக் கொண்டு பங்களாவின் மேல்மாடிக்குச் சென்றுள்ளனர்.

அந்த பெண்ணின் ஆடைகள் கிழிக்கப்பட்டதால் வெளியே வரமாட்டார் என்ற நம்பிக்கையில், கதவைப் பூட்டாமல் சென்றுள்ளனர். அப்போது வெளியே பால்காரர் செல்லும் சத்தம் கேட்டதால், உதவி கேட்டு அலறியபடியே அந்த பெண் கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்துள்ளார்.

இதையடுத்து விபரீதத்தை உணர்ந்த பால்காரர், தெற்குபட்டு ஊர் மக்கள் துணையுடன் கொள்ளையர்களை விரட்ட, கொள்ளையர்கள் மூவரும், மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளனர். பின்னர் வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடி கொண்டிருந்த காவலாளி ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வீட்டின் பின் பக்கம் கொள்ளையர்கள் மின்சார அடுப்பை வீசிச் சென்றிருப்பதைக் கண்டறிந்தனர். வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கியதோடு, கேமராவில் பதிவாகும் காட்சிகள் சேமித்து வைக்கப்படும் ஹார்ட் டிஸ்க்கையும் தூக்கிக் கொண்டு சென்றதும் தெரியவந்தது. 5 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார், கைரேகைகளைக் கொண்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை பிடித்து வைத்துக் கொண்ட சொகுசு பங்களா மேலாளர் ராஜேஷ் என்பவர், செய்தி வெளியிட்டால் விருந்தினர்கள் யாரும் அங்கு தங்கிச்செல்ல வரமாட்டார்கள் என்று கூறியதுடன், கேமராவில் எடுத்த காட்சிகளை அழிக்கக் கூறி கொலை மிரட்டல் விடுத்த சம்பவமும் அரங்கேறியது.

சினிமாக்களில் வருவது போல கொடூரக் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்துவிட்டுச் சென்றுள்ள சம்பவம், அந்த பகுதியில் சொகுசு பங்களாக்களில் வசிப்போரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments