வானத்தில் ஒலித்த தமிழ்... தமிழாசிரியையின் மகன்... விமானி பிரியவிக்னேஷின் எளிய பின்னணி!

0 5712
துணை விமானி ப்ரியவிக்னேஷ்

சென்னை - மதுரை இண்டிகோ பயணிகள் விமானத்தில் காவேரி, கொள்ளிடம், திருவரங்கம் என்று தமிழகத்தின் முக்கிய இடங்களைச் சுட்டிக்காட்டி, தமிழில் வர்ணனை செய்த துணை விமானியின் வீடியோ இனையதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக விமானங்களில் புறப்பாடு, வருகை, அவசர கால வழிமுறை போன்ற முக்கியமான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படும். இந்த அறிவிப்புகள் பெரும்பாலும் ஆங்கில மொழியில்தான் இருக்கும். அரிதாகவே தமிழில் அறிவிப்புகள் இடம்பெறும்.

இந்த நிலையில், இண்டிகோ விமானத்தின் துணை விமானி பிரியவிக்னேஷ் தமிழ் வர்ணனை வீடியோவை வெளியிட்டார். இதைத் தமிழ் மக்கள் ’வானிலும் ஒலிக்கும் தமிழ்’ என்று கூறி பகிர்ந்து வருகின்றனர். சமூகவலைத் தளங்களில், “விமானத்தில் தமிழில் வெளியான அறிவிப்பு கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. சென்னையிலிருந்து டெல்லிக்கு சென்றாலும் சரி, டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தாலும் சரி. எப்போதும் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் தான் அறிவிப்பு வெளிவரும். தமிழகத்தில் பறக்கும் விமானங்களில் கூட தமிழில் யாரும் அறிவிப்புகளை செய்வதில்லை. இப்போது  தமிழ் மொழியில் அறிவிப்பை கேட்கவே உற்சாகமாக உள்ளது'' என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

image
துணை விமானி ப்ரியவிக்னேஷ்

தமிழகத்தில் பிரபலகமாகியுள்ள பிரியவிக்னேஷ் இண்டிகோ விமானத்தில் துணை விமானியாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்குப் பூர்வீகம் தேனி மாவட்டம். ஆனால், பிறந்தது வளர்ந்தது எல்லாம் வட சென்னையில் உள்ள ராயபுரத்தில் தான். இவரது அப்பா சாதாரண நடைபாதை வியாபாரி. அம்மா ஒரு தமிழாசிரியர். தமிழாசிரியையின் மகன் என்பதால் இயல்பாகவே தமிழ் மீது பிரியவிக்னேஷ்க்கு பற்று அதிகம். எளிய குடும்பத்தில் பிறந்து அம்மாவின் பி.எஃப் பணம், வீடு மற்றும் நிலத்தை அடகு வைத்துதான் விமானப் பயிற்சியையே முடித்துள்ளார் பிரியவிக்னேஷ்.

கடுமையான முயற்சி மற்றும் உழைப்பின் மூலம்தான் இந்த நிலையை அடைந்துள்ள ப்ரிய விக்னேஷ் விமானத்தில் தமிழில் பேசியது குறித்து கூறியதாவது ”தமிழில் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பது எனக்கு பத்தாண்டு கால கனவு.  நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, விமானத்தில் இப்படித்தான் தமிழில் அறிவிப்பை வெளியிடுவேன் என்று பேசிக்காட்டினேன். அந்த கனவு நனவானதை வீடியோவாக எடுத்து வெளியிட்டேன். இப்போது, 'சொன்னதை செய்து காட்டிவிட்டாய்’ என்று நண்பர்கள் பாராட்டுகின்றனர். என் கேப்டன் சஞ்சீவ்தான் விமானத்தில் பயணிக்கும்போது எந்த இடத்தில் இருக்கிறோம், எந்த ஆற்றின் மீது செல்கிறோம், அருகே என்ன கோயில் இருக்கிறது என்று சொல்லிக்கொடுப்பார். அவர் அளித்த ஊக்கம் தான் என்னைத் தமிழில் அறிவிப்பை வெளியிட தூண்டியது” என்று கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments