சர்ச்சைக்குரிய யூ ட்யூபர் மாரிதாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு
போலி இமெயில் மூலம் மோசடி செய்ததாக தனியார் தொலைக்காட்சி நிர்வாகி கொடுத்த புகாரின்பேரில், யூ ட்யூபர் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் போலி இமெயில் ஒன்றை வைத்து தவறான தகவலை பரப்பி மோசடியில் ஈடுபட்டதாக, மாரிதாஸ் மீது தனியார் தொலைக்காட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், 5 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆவணங்களை பொய்யாக புனைவது, பொய்யாக புனையப்பட்ட டிஜிட்டல் ஆவணத்தை உண்மையானது போல காட்டுவது, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலி ஆவணம் தயாரிப்பது மற்றும் தகவல் தொழில் நுட்பங்களை தவறாக கையாள்வது தொடர்பான 2 சட்டப் பிரிவின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தனக்கு வந்த இமெயிலையே தான் வெளியிட்டதாகவும் அதனை போலியாக உருவாக்கி அனுப்பியவர்களை போலீசார் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று மாரிதாஸ் கூறியுள்ளார்.
Comments