ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க ஜெய்பூர் உயர்நீதிமன்றம் தடை
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய, சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், அப்பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.
சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை 2 முறை புறக்கணித்து விட்டனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைமைக் கொறடா பரிந்துரையின்பேரில், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் மீதும் தகுதிநீக்க நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீஸை சபாநாயகர் சி.பி.ஜோஷி அனுப்பினார். இதை எதிர்த்து அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
மேலும் இந்த விவகாரம் கட்சித் தாவல் தடைச் சட்டம் தொடர்பானது என்பதால் மத்திய அரசையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கடைசி நேரத்தில் சச்சின் பைலட் தரப்பினர் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதை ஏற்று, வழக்கில் மத்திய அரசையும் ஒரு தரப்பாக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி வாதிட உள்ளார். இந்த திருப்பங்களால், தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதுவரை 19 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவால், தகுதி நீக்க நோட்டீஸ் மீது சபாநாயகர் சி.பி.ஜோஷி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 200 உறுப்பினர்களை கொண்டுள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான 101 இடங்களைவிட, கூடுதலாக 2 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.
அதேசமயம், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் அசோக் கெலாட்டு எதிராக உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜக 72 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. சிறிய கட்சிகள், சுயேச்சைகளை சேர்த்தால் எதிர் தரப்பின் பலம் 97 ஆக உள்ளது. எண்ணிக்கை அடிப்படையில், ஆளும் தரப்புக்கும் எதிர் தரப்புக்கும் இடைவெளி குறுகலாக உள்ளது.
19 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்யும் பட்சத்தில், அசோக் கெலாட் அரசுக்கு சிக்கல் ஏற்படாது, எளிதாக பெரும்பான்மையை நிரூபித்து விடும். ஆனால், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் அசோக் கெலாட் அரசுக்கு சிக்கல் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, 4 பேருந்துகளில் ஆதரவு எம்எல்ஏக்களுடன், ராஜஸ்தான் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அசோக் கெலாட், அங்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்துப் பேசினார். கொரோனா தடுப்பு பணிகள், அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி வரும் அசோக் கெலாட், இந்த விவகாரத்தில் தாமதம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என கூறியிருந்தார்.
சட்டப்பேரவையை கூட்டும் விவகாரத்திற்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாகவும் அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அசோக் கெலாட் சந்தித்துப் பேசியபோது, அவருடன் சென்ற எம்எல்ஏக்கள், ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
Comments