பக்ரைன் அணி தகுதியிழப்பு ; ஆசியப் போட்டி கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற இந்திய அணிக்கு தங்கம்!
கடந்த 2018- ம் ஆண்டு ஆசியப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்தது. இதில், கலப்பு 4x400 தொடர் ஓட்டத்தில் இந்தியா சார்பாக முகமது அனாஸ், பூவம்மா, ஹிமா தாஸ் மற்றும் தமிழக வீரர் ஆரோக்கியராஜிவ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த தொடர் ஓட்டத்தில் பக்ரைன் நாட்டு குழு 3:11:89 விநாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்ததது. இந்திய குழு 3:15:71 விநாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப்பத்தக்கத்தை வென்றிருந்தது. இந்த நிலையில், பக்ரைன் நாட்டு குழுவில் இடம் பெற்றிருந்த கெமி எடிகோயா என்ற வீராங்கனை போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பக்ரைன் நாட்டு கலப்பு தொடர் ஓட்டக் குழுவிடத்திலிருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு, வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே ஆசியப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை அனு ராகவன் 4- வது இடம் பெற்றிருந்தார். இந்த ஓட்டத்திலும் பக்ரைன் நாட்டு வீராங்கனை கெமி எடிகோயா வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார்.
போதை மருந்து உட்கொண்ட காரணத்தினால், எடிகோயாவிடத்திலிருந்து வெண்கல பதக்கம் பறிக்கப்பட்டு இந்திய வீராங்கனை அனு ராகவனுக்கு வழங்கப்படவுள்ளது.
இது குறித்து இந்திய தடகளச் சங்கத் தலைவர் அடிலி சுமரிவாலா கூறுகையில், ''2018ம் ஆண்டு ஆசியப் போட்டியில் இந்திய தடகள வீரர் வீராங்கனைகள் 8 தங்கம் உள்ளிட்ட 20 பதக்கங்களை வென்றுள்ளனர் ''என்றார்.
ஜகார்த்தா ஆசியப் போட்டியில் இந்தியா மொத்தம் 15 தங்கப்பதக்கங்ளுடன் 69 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 8-வது இடம் பிடித்திருந்தது.
Comments