களமிறங்கும் மைக் டைசன்... 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பு

0 4526

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் தன் 54 வயதில் மீண்டும் களத்துக்கு திரும்புகிறார். அமெரிக்காவில் செப்டம்பர் 12- ந் தேதி நடைபெறும் கண்காட்சி போட்டியில் மற்றோரு உலகச் சாம்பியன் ராய் ஜோன்ஸ் ஜூனியரை மைக் டைசன் எதிர்கொள்கிறார்.

கடந்த 2005- ம் ஆண்டு குத்துச்சண்டை போட்டியிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற்றார் மைக் டைசன். 1986- ம் ஆண்டு உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டியில் ட்ரெவல் பிரெபிக்கை வீழ்த்தி மைக் டைசன் சாம்பியன் பட்டம் பெற்றார். அப்போது, மைக்டைசனுக்கு வயது 20 மட்டுமே ஆகியிருந்தது. 1990-களில் மைக் டைசன் களமிறங்கினால் அந்த போட்டி நிச்சயம் அனல் பறக்கும். உலகம் முழுக்க மைக் டைசனுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களும் இருந்தனர். 1997- ம் ஆண்டு மைக் டைசனுக்கும் இவான்டர் ஹோலிபீல்டுக்குமிடையே நடந்த குத்துச்சண்டை போட்டி மிகவும் பிரபலமானது. இந்த போட்டியின் போது, மைக் டைசன்  இவான்டர் ஹோலிபீல்டின் காதை கடித்து விடுவார். இதனால், சர்ச்சை ஏற்பட்டது. 

58 தொழில்முறை போட்டிகளில் பங்கேற்றுள்ள மைக் டைசன் 50 போட்டிகளில் வெற்றி பெற்றவர். தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களம் இறங்கும் மைக் டைசன் ராய் ஜோன்ஸ் ஜூனியரை சந்திக்கிறார். ராய் ஜோன்ஸ் ஜூனியருக்கு 51 வயதாகிறது. 2018- ம் ஆண்டு குத்துச்சண்டையிலிருந்து இவர் ஓய்வு பெற்றார்.

கலிபோர்னியாவில் கார்சன் நகரிலுள்ள டிக்னிட்டி ஹெல்த் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. எட்டு சுற்றுகள் கொண்ட இந்த போட்டி 3 மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் மைக் டைசன் சமூகவலைத் தளத்தில் தான் குத்துச்சண்டை பயிற்சி பெறுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார். அப்போது,  நிதி திரட்டும் கண்காட்சி ‘ குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தான் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ஓய்வுக்கு பிறகு மைக் டைசன் பங்கேற்கும் முதல் போட்டி இதுவென்பதால் குத்துச்சண்டை ரசிகர்களிடத்தில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments