வழிப்பறிக் கொள்ளையனை காட்டிக் கொடுத்த பேண்டேஜ்
சென்னையில் நகைக் கடை காவலாளி உட்பட சாலையோரம் படுத்திருந்த முதியவர்களையும் தாக்கி வழிப்பறி செய்த வழக்கில், பாதத்தில் இருந்த பேண்டேஜ் அடையாளத்தை வைத்து வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூரில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வரும் திருநாவுக்கரசு என்ற காவலாளியை கடந்த வாரம் சிலர், சரமாரியாக தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர். இந்த கொடூர தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதே பகுதியில் சாலையோரம் வசிப்பவர்கள் சிலரையும் தாக்கிய அந்த கும்பல் பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, காவலாளியை காலால் தாக்கிய வழிப்பறி கொள்ளையனின் இடது கால் பாதத்தில் காயத்திற்கான பேண்டேஜ் போடப்பட்டு இருந்ததை போலீசார் கவனித்துள்ளனர். இந்நிலையில் ராயப்பேட்டையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த சுலைமன் எனும் இளைஞரை போலீசார் விசாரித்தபோது, அவனது கால் பாதத்தில் பேண்டேஜ் இருப்பதை கண்டுள்ளனர்.
தொடர்ந்து,விசாரணையை தீவிரப்படுத்தியதில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் அவன் தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, அவனது கூட்டாளிகள் சக்திவேல் மற்றும் தனபால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலத்திற்கு கீழ் வசிக்கும் சுலைமான் கஞ்சா போதைக்கு அடிமையானவன் எனவும், அதற்கான பணத்திற்காக சாலையோரங்களில் வசிப்பவர்களை தாக்கி பணம் பறித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments