ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம்
ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கான நிரந்தர ஆணையத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து, பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு துறையில், 'ஷார்ட் சர்வீஸ் கமிஷன்' மற்றும் 'பெர்மனென்ட் சர்வீஸ் கமிஷன்' என்ற இரு ஆணையங்களின் கீழ், குறுகிய காலம் மற்றும் நிரந்தர பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில், குறுகிய கால ஆணையத்தின் கீழ் பெண்கள் மட்டும் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
ஆண்கள், நிரந்த பணிகளின் கீழ், ஓய்வு காலம் வரை பணியாற்றுகின்றனர். இந்நிலையில், எட்டு பெண் ராணுவ அதிகாரிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், 'ஆண்களுக்கு நிகராக, பெண்களும் ஓய்வு காலம் வரை நிரந்தரமாக பணியாற்றலாம் எனவும், பெண்களுக்கு என நிரந்தர ஆணையம் உருவாக்க வேண்டும்' எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கான நிரந்தர ஆணையத்தை அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், குறுகிய கால பணியில் உள்ள ராணுவ பெண் அதிகாரிகளின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானோருக்கு ஆண் அதிகாரிகளுக்கு இணையாக 10 முக்கிய பொறுப்புகளில் பணிகள் ஒதுக்கப்பட உள்ளன.
பெண் அதிகாரிகள் தற்போதுவரை ராணுவத்தில் நீதிபதி, அட்வகேட் ஜெனரல், ராணுவ கல்விப் பிரிவு ஆகியவற்றில் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம் ராணுவ வான் தடுப்பு பிரிவு, சிக்னல், பொறியாளர்கள், ராணுவ விமான போக்குவரத்து, மின்னணு மற்றும் இயந்திரவியல் பொறியாளர்கள், ராணுவ பீரங்கிப் பிரிவு, ராணுவ சேவை பிரிவு, உளவு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளிலும் ஓய்வு காலம் வரை பணி ஆற்றுவதுடன், கமாண்டர் பதவிகளை பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகி உள்ளது.
Comments