கிரெடிட் கார்டு வைத்திருந்தால் உஷார்... மோசடி கும்பலின் புதிய தந்திரம்

0 12961
கிரெடிட் கார்டு வைத்திருந்தால் உஷார்... மோசடி கும்பலின் புதிய தந்திரம்

சென்னையில் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி வங்கியில் இருந்து பேசுவதாகவும், கிரெடிட் அட்டைக்கான சலுகை வழங்குவதாகவும் கூறி, மோசடி செய்யும் கும்பல் குறித்து வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி கும்பலிடம் கல்லூரி பேராசிரியை ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை இழந்த பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

வங்கி அதிகாரிகள் போல் வாடிக்கையாளர்களிடம் பேசி டெபிட் கார்டு ரகசிய எண், ஓ.டி.பி போன்றவற்றை பெற்று பணத்தை சுருட்டி வரும் மோசடி கும்பல், தற்போது நூதன முறையில் கொள்ளையடித்து வருகிறது.

கிரெடிட் கார்டு எனும் வங்கி கடன் அட்டை கொண்டு ஷாப்பிங் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு ரிவார்ட்ஸ் பாயிண்ட் எனப்படும் வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். இவற்றை பயன்படுத்தி சில சலுகைகள் பெறலாம்.

இது போன்ற கடன் அட்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வங்கி ஊழியர்கள் போல் பேசும் மோசடி பேர்வழிகள், கடன் அட்டைக்கான வெகுமதி புள்ளிகளை பணமாக்கி கணக்கில் செலுத்தப்படும் எனப் பேசி லட்சக்கணக்கில் கொள்ளையடித்து வருகின்றனர்.

சென்னை போரூரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவரிடம் எஸ்.பி.ஐ வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவில் இருந்து பேசுவதாக தொடர்பு கொண்ட நபர், ரிவார்ட்ஸ் பாயிண்ட் எனும் வெகுமதி புள்ளிகளை பணமாக்கும் திட்டம் ஒன்று இருப்பதாக கூறியுள்ளார்.

முதலில் சந்தேகப்பட்டு அந்த நபரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் அந்த கல்லூரி பேராசிரியை. எதிர்முனையில் இருந்த நபர் பேராசிரியையின் வங்கி கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்களை தெரிவித்ததால் அவரை வங்கி ஊழியர் என நம்பி கேட்ட விவரங்களை தெரிவித்துள்ளார்...

இறுதியாக கடன் அட்டை வெகுமதி புள்ளிகளை பணமாக மாற்றி, அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறியதை நம்பி, அவரது செல்போனிற்கு வந்த ஓ.டி.பி எண்ணை கூற, பேராசிரியையின் கடன் அட்டையிலிருந்த ஒன்றரை லட்சம் பணம் களவாடப்பட்டது.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வங்கி மோசடி தடுப்பு பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதே பாணியிலான மோசடி புகார்கள் இந்த ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் வருவதாக தெரிவித்துள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார், வங்கி கணக்கு தொடர்பான எந்த தகவலையும் வங்கி ஊழியர்கள் செல்போன் மூலம் கேட்பதில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments