கொடைக்கானலில் தடை விதிக்கப்பட்ட பேரிஜம் ஏரியில் மீன் பிடித்து சிக்கிய நடிகர் சூரி !
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . சுற்றுலாத்தளமான கொடைக்கானலில் முதலில் கொரோனா தொற்று அறவே இல்லாமல் இருந்தது. தற்போது, கொடைக்கானலிலும் கொரோனா வேகமாக பரவுவதால் வணிகர்களே முன்வந்து கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தளவுக்கு கொடைக்கானலில் நிலைமை உள்ளது.
வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் கொடைக்கானல் வர தடை இருந்தாலும் விதிகளை மீறி பலரும் கொடைக்கானலுக்கு வந்து தங்கி செல்வது அதிகரித்துள்ளது. காமெடி நடிகர் சூரிக்கு கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் வீடு உள்ளது. இரு நாள்களுக்கு முன், சூரி, களவாணி படத்தில் நடித்த விமல் உள்ளிட்ட நான்கு பேர் சென்னையிலிருந்து கொடைக்கானல் வந்துள்ளனர். நேற்று முன்தினம் சூரி உள்ளிட்டவர்கள் முக்கிய சுற்றுலா பகுதியான பேரிஜம் வனத்துக்குள் சென்று அங்குள்ள ஏரியில் கட்லா மீன்களை பிடித்து சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத் தளத்தில் பரவியது. இது குறித்து, சுற்றுச்சூழர் ஆர்வலர் மகேந்திரன் என்பவர் கூறுகையில், '' நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கேளம்பாக்கம் சென்றதற்கே கேள்வி கேட்கிறார்கள். ஆனால், நடிகர் சூரி உள்ளிட்டவர்கள் சென்னையிலிருந்து கொடைக்கானல் வந்து இங்கு தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்று மீன் பிடித்து சாப்பிட்டுள்ளனர்.
ஒரு மாதத்துக்கு முன்பு வரை கொடைக்கானலில் கொரோனா தொற்று கட்டுக்கள் இருந்தது. கடந்த மாதம் பேரிஜம் ஏரி பகுதிக்கு சென்ற இளைஞர்களுக்கு வனத்துறையினர் ரூ.40,000 அபராதம் விதித்தனர். ஆனால், சூரி உள்ளிட்டவர்களுக்கு வனத்துறையினர் ஒத்துழைப்போடு பேரிஜம் ஏரிக்கு சென்றுள்ளனர். நடிகர் சூரிக்கு உதவிய வனத்துறை ஊழியர்கள் மற்றும் டோல்கேட் பகுதியில் பணியாற்றியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் '' என்றார்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடத்தில் கேட்ட போது, ''தடையை மீறி பேரிஜம் ஏரி பகுதிக்கு சென்றவர்களுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதித்தோம். அவர்களும் பணத்தை செலுத்தியுள்ளனர் ''என்று விளக்கமளித்தனர்.
Comments