சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், காவலர் முருகனின் ஜாமீன் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி தாண்டவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
காவலர் முருகன் மற்றும் சி.பி.ஐ தரப்பில் வழக்கறிஞர்கள் காணொலிக் காட்சி வாயிலாக வாதிட்டனர். வழக்கு தொடக்க நிலை விசாரணையில் இருப்பதாலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாலும் காவலர் முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சி.பி.ஐ தரப்பு வாதிட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், முதுகு வலி காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments