உளவு பார்க்கும் மையம்; கட்டடத்தில் பிடித்த 'திடீர்' தீ - ஹூஸ்டன் சீன துணை தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்ட பின்னணி

0 8036

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மோதல் முற்றியுள்ளது. கொரோனா உலகம் முழுக்க பரவ சீனாவே காரணமென்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில், டெக்ஸாஸ் மாகாணத் தலைநகரான ஹூஸ்டன் நகரில் செயல்பட்டு வந்த சீன துணை தூதரகத்தை 72 மணி நேரத்துக்குள் மூட வேண்டுமென்று  டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஏஅண்டுஎம் மருத்து ஆராய்ச்சி மையம் , டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் , ஹூஸ்டனில் உள்ள எம்.டி ஆண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களில் தரவுகளை ஹூஸ்டனிலுள்ள சீன துணை தூதரகம் திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

குடியரசுக் கட்சியின் புளோரிடா மாகணத்தை சேர்ந்த செனட்டர் மார்கோ ரூபியோ தன் ட்விட்டர் பதிவில் " சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒற்றர்களின் வலையமைப்பாக ஹூஸ்டன் தூதரகம் செயல்பட்டுள்ளது. இது ராஜ்யரீதியிலான உறவுகளை மேற்கொள்ளும் மையம் அல்ல'' என்று தெரிவித்துள்ளார்.image

சீன துணை தூதர் கெய் வீ கூறுகையில், அமெரிக்க அரசின் இந்த முடிவு இரு நாட்டு உறவையும் கடுமையாக பாதித்து விடும். ஒரு குற்றச்சாட்டை சொல்வதற்கு முன், அதற்குரிய ஆதாரங்களை காட்ட வேண்டும் '' என்று அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்துள்ளார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் பின், ''துணை தூதரகத்தை குறுகிய காலத்துக்குள் மூட உத்தரவிட்டது சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டிருக்கும் கடுமையான நிலைப்பாட்டை காட்டுகிறது. இந்த முடிவை திரும்பெறாவிட்டால், உறுதியான எதிர் விளைவுகளை அந்த நாடு எதிர்கொள்ள நேரிடும் '' என எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே. சீன தூதரகத்தை மூட உத்தரவிட்ட சில மணி நேரத்துக்குள் கட்டடத்தின் உள்ளே காகிதங்கள் எரிக்கப்பட்டதாகவும் அதனால ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக தீயணைப்பு வண்டிகள் அந்த கட்டத்தை நோக்கி சென்றதாகவும் ஆனால், தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தினுள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று ஹூஸ்டன் கிரானிக்கல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், சீன தூதரகத்துக்குள் ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தூதரகத்தினுள்ளே ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மேலும் சில சீன மையங்களும் மூட யோசித்து வருகிறோம் '' என்றார்.

அமெரிக்க அரசின் உத்தரவின்படி, நாளை மாலை 4 மணிக்குள் தூதரகம் மூடப்பட்டு விட வேண்டும். இதற்கிடையே, வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தததாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வுஹான், ஷாங்காய், ஹாங்காங், குவாங்சு நகரங்களில் உள்ள அமெரிக்க துணை தூதரகங்களை மூட சீனா உத்தரவிடலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments