இதற்கு பெயர் தான் மஞ்ச குளிக்குரதுங்கோ..! ஒரு கிலோ மஞ்சள் ரூ.2500..!

0 9724

கொரோனாவால் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 2,500 ரூபாய் வரை விற்கப்படுவதால், ராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமாக கள்ளத் தோணியில் கடத்த முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை கள்ளத்தோணியில் கடத்திய காலம் போய், தற்போது கொரோனாவால் மஞ்சளையும், மிளகையும் கடத்தும் நிலைக்கு வந்துள்ளனர் நம்ம ஊர் கடத்தல்காரர்கள்..!

ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், மிளகு உள்ளிட்டவைகள் கடத்தப்பட உள்ளதாக காவல்கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக செல்போன் எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வேதாளை கடற்கரைப் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. அப்போது அங்கு வந்த ஆம்னி வேனை மறித்த போது, போலீசை கண்டதும் ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார் வேனுக்குள் 15 மூட்டைகளில் 600 கிலோ மஞ்சள் பதுக்கி வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

விசாரணையில் பாம்பன், குத்துக்கல் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் என்பவரின் படகு மூலம் இந்த மஞ்சளை இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங், பாபு உசேன், அப்துல் முபாரக் ஆகிய 3 பேரை கைது செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய ஆம்னி வேன் ஓட்டுனர் ரியாஸ்கானை தேடி வருகின்றனர்.

இதையடுத்து கடத்தப்படும் அளவுக்கு மஞ்சள் விலை உயர்ந்த பொருளா ? என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சில சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.

இலங்கையில் கொரோனாவை தடுக்கும் கிருமி நாசினியாக மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றை அதிக அளவு பயன்படுத்துவதால், அவற்றைக் கடத்த திட்டமிட்டு முதல் கட்டமாக மஞ்சளை கடத்திச் செல்ல முயன்றுள்ளனர்.

இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 1800 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகின்றது. இதனால் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வியாபாரியிடம் இருந்து கிலோ 90 ரூபாய்க்கு விற்கும் மஞ்சளை வாங்கி சேகரித்து வைத்து ஆம்ஸ்ட்ராங் என்பவரின் படகு மூலம் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் கடத்திச்செல்லப்படும் மஞ்சளுக்கு பதில் அங்கிருந்து தங்கத்தை கடத்திவரவும் திட்டமிட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இலங்கையில் உயர்ந்துள்ள விலைவாசியில் மஞ்ச குளிக்க திட்டமிட்ட கடத்தல் கும்பல் வசமாக சிக்கியுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கின்ற குற்ற செயல்கள் குறித்து காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் 94899 19722 என்ற பிரத்யேக செல்போன் நம்பருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY