தங்கக் கடத்தல் விவகாரம்.. களமிறங்கிய அமலாக்கத்துறை..!
தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னாவும் அவரது கூட்டாளியும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ விசாரணை காவலில் உள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தேசியப் புலனாய்வு அமைப்பு, சுங்கத்துறை மற்றும் வருமானவரித்துறையைத் தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் தொடர்பான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும், சட்டவிரோதமான வருவாயில் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால் அமலாக்கத்துறை விசாரணையை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வழக்கில் இணைக்கவும் தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயருக்கு நாளை வரை என்ஐஏ காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரையும் விசாரிக்க சுங்கத்துறைக்கு சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது, இதனிடையே, ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் நாளை விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, கடத்தலில் கிடைத்த பணத்தை ஹவாலா மற்றும் தீவிரவாத செயல்களுக்கு பய்ன்படுத்தியதாக என்.ஐ.,ஏ குற்றம் சாட்டி உள்ள நிலையில், ஸ்வப்னாவின் கணவரான ஜெயகுமாரின் சொந்த ஊரான கொல்லம் பகுதியில் விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது, ஸ்வப்னா தனது கணவர் ஜெயகுமாரை துணை ஆட்சியர் என கூறி பல இடங்களில் மோசடி செய்ததும், கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை தோழியை பினாமியாக வைத்து நான்கு கேரள சினிமாவிற்கு பைனான்ஸ் செய்ததும் தெரிய வந்துள்ளது.
Comments