ஹெலிகாப்டரில் இருந்து டாங்கிகளை அழிக்கும் துருவஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி
ஹெலிகாப்டரில் இருந்து எதிரிகளின் டாங்கிகளை தாக்கி அழிக்கும் துருவஸ்திரா ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலம் பாலசோரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதி ஹெலிகாப்டர் இன்றி ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
எதிரிகளின் ராணுவ டாங்கிகளை தாக்கி அழிக்கும் மூன்றாவது தலைமுறை ஏவுகணை அமைப்பான ஹெலினா, இந்திய ராணுவத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பருவ காலங்களிலும், பகல் மற்றும் இரவிலும் தாக்குதல் நடத்த முடியும். தற்போது அதனை மேம்படுத்தி துருவஸ்திரா ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு எதிரிகளின் ராணுவ டாங்கிகள் மீது நேர் எதிராகவும், மேல் நோக்கியபடி இருந்தும் தாக்குதல் நடத்த முடியும். இந்த ஏவுகணை 500 மீட்டர் முதல் 7 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது.
1.9 மீட்டர் நீளமும், 45 கிலோ எடையும் கொண்ட துருவஸ்திரா ஏவுகணை, நொடிக்கு 240 மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 4 லான்ச்சர்கள் உதவியுடன் 8 ஏவுகணைகளை ஹெலிகாப்டரில் பொருத்த முடியும்.
Comments