பைக் என்ஜினைக்கொண்டு மினி டிராக்டரை உருவாக்கி நிலத்தை உழும் கிராமத்து விஞ்ஞானி!

0 11948
விவசாயி நம்பிராஜன்

கொரோனா ஊரடங்கால் நிலத்தை உழுவதற்கு, கூலியாட்கள் யாரும் வேலைக்கு வராத காரணத்தால், விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக இருசக்கர வாகனத்தின் மோட்டார் இன்ஜீசினைப் பயன்படுத்தி மினி டிராக்டர் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார் கோவில், அருகேயுள்ள கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பிராஜன். ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தில் பருத்தி, சோளம், வாழை, கரும்பு ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளார். அடிப்படையில் விவசாயியான நம்பிராஜனுக்கு இரு சக்கர வாகனங்களையும் பழுது பார்க்க தெரியும். 

image

கோடைக்காலத்தில் நிலத்தை உழுது, செப்பனிட்டு தயார் நிலையில் வைத்தால் தான் ஆடி மாதத்தில் விதை விதைக்க முடியும். அதற்காக, ஏர் உழும் விவசாயிகளையும், டிராக்டர் வைத்திருப்பவர்களையும் வேலைக்கு அழைத்துள்ளார் நம்பிராஜன். ஆனால், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் அவர் நிலத்துக்கு யாரும் வேலைக்கு வர தயாராக இல்லை. 

நிலத்தை உழ ஆள் கிடைக்காததால், நாகரோஜனே, இரு சக்கர வாகனத்தின் இன்ஜீனைப் பொருத்தி   மினி டிராக்டர் ஒன்றைச் செய்து அதில்  கலப்பையைப் பொருத்தி தனி கருவியை உருவாக்கியுள்ளார். இந்த கருவியைக் கொண்டு உழுதல், புழுதி அடித்தல், பாத்தி அமைத்தல் ஆகிய பணிகள் அனைத்தையும் இவர் ஒருவரே செய்து வருகிறார்.

image

மினி டிராக்டரை உருவாக்கியது குறித்து நாகராஜன் கூறுகையில், “கொரோனா ஊரடங்கால் வேலைக்கு ஆள் கிடைப்பதே சிரமமாக உள்ளது. அப்படியே, வேலைக்கு யாராவது வந்தாலும் ஒரிரு நாள்கள் தான் செய்கிறார்கள். அதன்பிறகு நின்றுவிடுகிறார்கள். ஏர் உழுது, புழுதி அடிக்க ஆள் வராததால், நானே பழைய பைக் ஒன்றை விலைக்கு வாங்கி இந்த மினி டிராக்டரை வடிவமைத்து, உருவாக்கியுள்ளேன். ஒரு ஏக்கருக்கு மூன்று லிட்டர் பெட்ரோல் தான் செலவாகிறது.ஆனால், இதையே கூலியாள்கள் செய்தால் மூன்று, நான்கு நாள்கள் செய்வார்கள். ஒரு நாளைக்கு 15 ஆள்கள் வரை பிடிக்கும். குறைந்த செலவில் நான் உருவாக்கியுள்ள டிராக்டரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை வேளாண் துறையினர் ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் குறைந்த செலவில் உருவாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு சக்கர வாகனங்களைப் பழுது நீக்கம் செய்யும் மெக்கானிக்காக மட்டுமல்லாமல், அந்த அறிவைப் பயன்படுத்தி புது எந்திரத்தையே உருவாக்கி விவசாயத்துக்குப் பயன்படுத்தியுள்ள நாகராஜன் பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

 
 
 
 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments