100 அடி கிணற்றில் பூனை என சிறுத்தையிடம் சிக்கிய ஆபீசர்..! ஒரு திக் திக் மீட்பு பணி
மைசூர் அருகே ஊர்மக்கள் விரட்டியதில் 100 அடி ஆழ பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த காட்டுப்பூனையை தேடி இரும்புக்கூண்டு வழியாக இறங்கிய வனத்துறை அதிகாரி ஒருவர், உள்ளே சிறுத்தை இருப்பதை கண்டு மிரண்டு போனார். வலைக்குள் இறைச்சி வைத்து சிறுத்தையை மீட்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் எச்.டி.கோட் தாலுக்கா காரபுரா பகுதியில் ஊருக்குள் புகுந்த பெரிய அளவிலான காட்டுப்பூனை ஒன்று அங்குள்ள 100அடி கிணற்றில் தவறி விழுந்தது விட்டதாக கூறி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த வனத்துறையினர். அந்த கிணற்றில் விழுந்த பூனையை மீட்டு வர வனத்துறை அதிகாரி சித்தராஜ் என்பவரை இரு அறைகள் கொண்ட இரும்பு கூண்டில் அமரவைத்து 100 அடி ஆழ கிணற்றில் இறக்கத் திட்டமிட்டனர். அதன்படி, செடி-கொடிகள் நிறைந்த அந்த கிணற்றுக்குள் இறக்கப்பட்ட கூண்டுக்குள் இருந்த வன அதிகாரி செல்போனில் பேசியவறே தகவல் அளித்துக் கொண்டே சென்றார்.
தண்ணீர் இல்லாத அந்த கிணற்றின் அடிப்பகுதியில் கூண்டு இறக்கப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் இருப்பது பூனை அல்ல சிறுத்தை என்பதை டார்ச் வெளிச்சத்தில் கண்ட சித்தராஜ் அதிர்ச்சி அடைந்தார். அந்த கிணற்றின் பாறை இடுக்கில் பதுங்கி இருந்த சிறுத்தை உறுமியபடியே காணப்பட்டது.
இருந்தாலும் மனம் தளராத அந்த வன அதிகாரி இரு பிரிவாக இருக்கும் கூண்டின் மற்றொரு பகுதியை திறந்து சிறுத்தையை கூண்டுக்குள் வரவழைத்து உயிருடன் மீட்க முயற்சி செய்தார். ஆனால் கிணற்றுக்குள் இருட்டாக இருந்ததால் சிறுத்தையை அவரால் கூண்டுக்குள் வரவழைக்க இயலவில்லை. இதையடுத்து அவரை கூண்டுடன் மேலே தூக்கினர்.
அதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை வலைக்குள் இறைச்சியை வைத்து கிணற்றுக்குள் அனுப்பி வைத்தனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா ஒன்றையும் உள்ளே கயிறு மூலம் அனுப்பினர்.
அப்போது, இறைச்சியை எடுக்க வலை மீது சிறுத்தை ஏறியதும் உடனடியாக வலையை மேல் நோக்கி இழுக்க, இறைச்சித்துண்டுக்கு ஆசைப்பட்ட சிறுத்தை வசமாக சிக்கிக் கொண்டது. அதனை, அப்படியே 100 அடி ஆழ கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டு கூண்டில் அடைத்தனர்.
கடும் சீற்றத்துடன் காணப்பட்ட 3 வயதே ஆன அந்த பெண் சிறுத்தை, கூண்டுக்குள் கிடக்கிறோம் என்பதை மறந்து படம் பிடித்தவரை நோக்கி பாய்ந்து கூண்டில் மோதிக் கொண்டது.
மேலும், சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 100 அடி ஆழத்தில் இருந்து குதித்த நிலையிலும் சிறுத்தைக்கு பெரிய அளவிலான காயங்கள் ஏதும் இல்லை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Comments