துப்பாக்கியால் சுட்ட கொலையாளியை பிடித்த போலீஸ் மோப்ப நாய்..! 3 மணி நேரத்தில் சுற்றி வளைத்தது
துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடியவனை, 12 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று போலீஸ் மோப்ப நாய் சுற்றி வளைத்த சம்பவம் பெங்களூர் அருகே அரங்கேறியுள்ளது.
கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண மோப்ப நாய்களை காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான வழக்குகளில் போலீசாரை சுற்றலில் விடும் மோப்ப நாய்களுக்கு மத்தியில் பெங்களுரு அருகே மோப்ப நாய் ஒன்று 12 கிலோ மீட்டர் விரட்டிச்சென்று கொலையாளியை சுற்றி வளைத்துள்ளது.
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் சோலிகெரே பகுதியை சேர்ந்த சந்திராநாயக் என்பவரை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாவணகெரே போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர்.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் "துங்கா" அழைத்து வரப்பட்டது. அந்த மோப்ப நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சுமார் 12 கிலோ மீட்டர் ஓடிச் சென்று, குற்றவாளியின் வீட்டை மோப்ப நாய் "துங்கா", அடையாளம் காட்டியது . போலீசார் அந்த வீட்டில் இருந்து ஒருவர் தப்பி ஓட முயன்ற நபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.
அதில் அவன் சோலி கெரே பகுதியை சேர்ந்த சேத்தன் என்பதும் சந்திரா நாயக் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கும்பலை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. அவன் கொடுத்த தகவலின் பேரில் அவனது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர் முன்விரோதத்தில் இந்த கொலையை செய்திருப்பதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த கொலை சம்பவம் தொடர்பாக எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில் மோப்பநாய் "துங்கா" கொலையாளிகளை 3 மணி நேரத்தில் அடையாளம் காட்டியிருப்பது போலீசாருக்கு மட்டுமின்றி , மோப்பநாய் பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. இதையடுத்து துங்காவிற்கு மாலை அணிவித்து கவுரவப்படுத்தியுள்ளனர்.
மோப்ப நாயான "துங்கா", டாபர் மேன் பின்சார் வகையை சேர்ந்தது. தற்போது 9 வயது நிறைவடைந்துள்ளது. பிறந்த உடனே தாவணகெரே போலீசில் இந்த மோப்பநாய் சேர்க்கப்பட்டது. இதுவரை 60 குற்ற வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும்படி செய்துள்ளது . இதில் 30 கொலை வழக்குகள் சம்பந்தப்பட்டவை. மற்றவை வழிப்பறி , திருட்டு வழக்குகள் ஆகும். இந்த "துங்கா" மோப்பநாயால் , போலீசாருக்கு பெருமை கிடைத்துள்ளது கர்நாடக போலீசார் கூறியுள்ளனர்.
ஆறறிவு உள்ள மனிதர்களே ஏழாம் அறிவை பயன்படுத்தி புத்தி சொல்வதாக நினைத்து, சமூகத்தில் மதம் மற்றும் சாதி ரீதியாக ஏழரைகளை உருவாக்கி விடும் நிலையில் ஐந்தறிவுள்ள நாய் ஒன்று துப்பறிதலில் சிறந்து விளங்கி குற்றவாளிகளை அடையாளம் காட்டி வருவது காவல்துறைக்கு பெருமையே..!
Comments