லடாக்கில் தாய்... டெல்லியில் மகன்; விமானத்தில் வந்த தாய்ப்பால் புட்டிகள்... 35 நாள் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
லடாக் தலைநகர் லேவை சேர்ந்தவர் ஜிக்மெத் வாங்டு. இவரின், மனைவி டோர்ஜே பால்மா நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்நாடகா, மைசூரில் உள்ள பள்ளியில் ஜிக்மெத் வாங்டு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூன் 16- ந் தேதி டோர்ஜே பால்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்தது முதலே பால் குடிக்க மறுத்தது. தொடர்ந்து, டெல்லியிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையில் குழந்தையை அனுமதிக்க லே மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். டோர்ஜே பால்மாவின் சகோதரர் கடந்த 18- ந் தேதி குழந்தையை டெல்லி மருத்துவமனையில் அனுமதித்தார். அதேவேளையில், குழந்தையின் தந்தை ஜிக்மெத் வாங்டுவும் மைசூரிலிருந்து டெல்லி மருத்துவமனைக்கு சென்றடைந்தார்.
மேக்ஸ் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த போது, உணவுக்குழாயில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக , 19- ந் தேதியே குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதேவேளையில், 'அறுவை சிகிச்சை செய்திருப்பதால், குழந்தைக்கு தாய்ப்பால் கிடைத்தால் இந்த நேரத்தில் நல்லது. அதனால், தாய்ப்பால் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்...!' என்று ஜிக்மெத் வாங்விடத்தில் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், குழந்தையின் தாய் டோர்ஜே பால்மா லடாக்கில் லேவில் இருந்தார். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் ஜிக்மெத் வாங்டு யோசித்தார். அப்போது, லே விமான நிலையத்தில் பணி புரிந்த தன் நண்பர்கள் சிலர் குறித்து அவருக்கு நினைவுக்கு வந்தது.
உடனடியாக, அவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார். நண்பர்கள் உதவியதால், லேவிலிருந்து தினமும் டெல்லி விமான நிலையத்துக்கு தாய்ப்பால் கொண்டு செல்ல விமான நிறுவனங்கள் முன் வந்தன. குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு இலவசமாகவே விமான நிறுவனங்கள் இந்த சேவையை செய்தன. கடந்த 35 நாள்களாக தினமும் , 1000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து மனைவி கொடுத்து விடும் தாய்ப்பால் புட்டிகளை டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு சென்று ஜிக்மெத் வாங்டு வாங்கிக் கொள்வார். பிறகு, மருத்துவமனையில் செவிலியர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவார்கள். காலியான பாட்டில்களை மீண்டும் லேவுக்கு விமானம் வழியாக கொடுத்து விடுவார் ஜிக்மெத். தாய்ப்பால் குடித்ததால், தற்போது, குழந்தையின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இன்னும் இரு நாள்களில் குழந்தை வீடு திரும்பவுள்ளது.
இது குறித்து மேக்ஸ் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் ஹர்ஸ்வர்த்தன் கூறுகையில், ''இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகள் குழந்தை பிறந்த 48 மணி நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். அதனால்தான், மிக விரைவாக அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்தோம். இப்போது, குழந்தை நன்றாக குணமடைந்து விட்டான். செவிலியர்களைப் பார்த்து சிரிக்கிறான். கைகால்களை அசைத்து விளையாடுகிறான் '' என்றார்.
குழந்தையின் தந்தை ஜிக்மெத் வாங்டு, ''என் நண்பர்களால்தான் என் குழந்தைக்கு தினமும் தாய்ப்பால் கிடைத்தது. இப்போது, குழந்தை குணமாகியிருக்கிறான். அதற்காக, டாக்டர்களுக்கும் , நண்பர்களுக்கும் விமான நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.
Comments