'ஆறு வருட உழைப்பு... அரபு நாட்டிலிருந்து செவ்வாய்க்குப் பறந்த முதல் செயற்கைக் கோள்... அமீரகம் சாதித்த பின்னணி!

0 10274

மெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவை மட்டுமே இதுவரை செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்கலன்களை ஏவியுள்ளன. பல நாடுகளும் தயங்கும் விஷயம் செவ்வாய் கிரக பயணம். ஆனால், விண்வெளித் துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்தை நோக்கித் தனது செயற்கைக் கோளை வெற்றிகரமாக ஏவியுள்ளது. கொரோனா நோய்ப் பரவலுக்கு மத்தியில் பல்வேறு நாடுகள் விண்வெளி திட்டத்தை ஒத்திவைத்துள்ள சூழலில் இந்த சாதனையை அமீரகம் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை, அதிகாலை நேரத்தில் ஜப்பான் நாட்டின்  'தனேகாஷிமா' விண்வெளி ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது, ஐக்கிய அரபு அமீரகத்தின் ’அல் அமால்’ செயற்கை கோள்.  அரேபிய மொழியில் அல் அமால் என்றால் நம்பிக்கை என்று அர்த்தம். ராக்கெட் ஏவப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே தனது முதல் சிக்னலை துபாயிலுள்ள முகம்மத் பின் ரஷித் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து, வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் அமீரக விஞ்ஞானிகள்.

image

அல் அமால் செயற்கைக்கோள் 1.3 டன் எடை கொண்டது. இது முழுக்க முழுக்க ஐக்கிய அமீரகத்தால் உள்நாட்டிலேயே  தயாரிக்கப்பட்டது. விண்ணில் ஏவுவதற்கு மட்டும் ஜப்பான் நாட்டின் உதவி அமீரகம் நாடியது. 

வரும் 2021 பிப்ரவரி மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உருவானதன் 50 - ம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதே பிப்ரவரி மாதத்தில்தான் அல் அமால் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையை அடைந்து விடும். இந்த செயற்கைக்கோள் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றியபடி செவ்வாய் கிரகத்தின் வானிலை மற்றும் காலநிலையை ஆராய்ச்சி செய்யும் என்று கூறப்படுகிறது.

புவி வட்டப் பாதையைவிட்டு விலகியதும், செவ்வாய் கிரகத்தை நோக்கிய 49,50,00,000 கி.மீ பயணம் முழுவதும் சூரிய சக்தியைக் கிரகித்து, பேட்டரி வழியாக இயங்கும். ரூ. 1,500 கோடி இந்திய மதிப்பீட்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது அமீரகம். இதன் மூலம், அரேபிய மண்ணிலிருந்து  புவி வட்டப்பாதையைக் கடந்து விண்வெளிக்கு  செயற்கைக்கோளை ஏவிய முதல் நாடு என்ற பெருமையை அமீரகம் பெற்றுள்ளது.

image

சொந்தமாகச் செவ்வாய் கிரகத்துக்குச் செயற்கைக்கோளைத் தயாரித்து ஏவப் போகிறோம் என்று அமீரகம் சொன்ன போது உலக நாடுகள் அனைத்தும் ஆச்சரியத்துடன் பார்த்தன.

ஆறு வருடங்களுக்கு முன்பு இந்தத் திட்டம் யோசனை வடிவில் இருந்தபோதே அமீரக அரசு ஒன்றை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டது. இந்த விண்கலத்தை நாம் வேறு நாடுகளிடம் வாங்கப்போவதில்லை. நாம்தான் தயாரிக்கப் போகிறோம். இது தொடர்பான அனுபவம் மற்றும் கல்வியறிவுக்கு மட்டுமே மற்ற நாடுகளை சார்ந்திருக்கப் போகிறோம் என்று தெளிவாக அந்த நாடு கூறியது. 

இது தொடர்பாக, விண்வெளி ஆய்வுகளுக்கான கருவிகள் வடிவமைப்பில் முன் அனுபவம் உள்ள கொலராடோ பல்கலைக்கழகம், அரிசோனா மாநில பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக விஞ்ஞானிகள்  குழுவால் ஏற்கெனவே இருக்கும் சோதனை உள்கட்டமைப்பைப் பயன்படுத்தவும், அனுபவமிக்க விண்வெளி பொறியாளர்களிடமிருந்து அறிவைப் பெற்று ஆறு ஆண்டு காலத்தில் இந்த சாதனையை அமீரகம் படைத்துள்ளது. 

image

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான ஷேக் கலீபா, இந்தத் திட்டத்தில் திறமையுடன் உழைத்த அனைவருக்கும் தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும்  தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் அரேபிய இளைஞர்களை விண்வெளி துறையில் ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறது அமீரகம். மேலும், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இல்லை. ஆனால், தண்ணீரின் அடிப்படை மூலக்கூறான ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகிய இரண்டும் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கிறது. இது எப்படி என்பதை ஆய்வு செய்யவும், செவ்வாய் கிரகத்தின் காலநிலையைப் பற்றி ஆய்வு செய்யவும் அல் அமால் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.  

இது மட்டுமல்லாமல், வெறும் எண்ணெய் வளத்தை மட்டும் சார்ந்திருக்க அமீரகம் விரும்பவில்லை. எதிர்காலத்தில் செயல்படுத்தப் பல திட்டங்களைக் கையில் வைத்துள்ளது. அதில் ஒன்றுதான் இந்த செவ்வாய் கிரகத்தை நோக்கிய ‘நம்பிக்கை’ திட்டம்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments