ஆக்ஸ்போர்டு பல்கலை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு ; லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்க இந்தியா முடிவு

0 13333

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களிடத்தில் பரிசோதித்து பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இங்கிலாந்திலுள்ள 5 மருத்துவமனைகளில் மனிதர்களிடத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 18 முதல் 55 வயது வரை நல்ல ஆரோக்கியமான 1077 நபர்களை தேர்வு செய்து பரிசோதிக்கப்பட்டனர். 

அதில், தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக நல்ல பாதுகாப்பு கிடைத்துள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட 56 நாள்களுக்கு பிறகு வைரஸை எதிர்த்து உடலில் போராடும் ஆன்டிபாடி மற்றும் டி செல்கள் அதிகரித்தாகவும் விஞ்ஞானிகள்' தி லான்செட்' மருத்து இதழில் தெரிவித்துள்ளனர். உடலில் உள்ள டி செல்கள்தான் கொரோனா போன்ற வைரஸ்களை எதிர்த்து போராட முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்ககது.

ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்தை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்க உள்ளது. உலகிலேயே அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்வது சீரம் இன்ஸ்டிடியூட்தான். ஏற்கெனவே, ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றதும் சீரம் நிறுவனத்துடன் இணைந்து அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்வோம் என்று கூறியிருந்தன.

இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  அடார் பூனாவாலா கூறுகையில், ''ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்துள்ள தடுப்பூசி குறித்து நல்ல விதமான செய்தி கிடைத்துள்ளது. இந்தியாவிலும் பரிசோதனைகளை நடத்த ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிப்போம். மிக விரைவிலேயே அனுமதி கிடைத்து விடும். இந்தியாவிலும் சோதனைகளை தொடங்கி, விரைவிலேயே அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்வோம் '' என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments