விரட்டும் காவல் கூட்டம்... ஓடும் கறுப்பர் கூட்டம் ..! மேலும் இருவர் கைது

0 20053

தமிழ் கடவுள் முருகப்பெருமானை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டது தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ் கடவுள் முருகப்பெருமானை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வீடியோவை மாம்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து பதிவேற்றம் செய்த சோமசுந்தரத்தையும், மறைமலை நகரைச் சேர்ந்த கறுப்பர் கூட்டத்தின் குகன் என்பவனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். போலீசில் தாங்கள் பதிவேற்றம் செய்த கந்த சஷ்டி குறித்த ஆபாச பரப்புரை வீடியோக்களை நீக்கிவிட்டதாக சுரேந்திரன் தெரிவித்திருந்தான். ஆனால், அவனது சர்ச்சைக்குரிய வீடியோக்களை அட்மின் மட்டுமே பார்க்கும்படியாக பிரைவேட் செய்து வைத்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பரபரப்பு அடங்கிய பின்னர் மீண்டும் அந்த வீடியோக்களை யுடியூபில் பொதுதளத்தில் பரப்பும் உள் நோக்கத்துடன் அவனது செயல்பாடு இருந்ததாகக் கூறும் காவல்துறையினர் சிறையில் இருக்கும் அவனையும், செந்தில்வாசனையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனலை ஒட்டு மொத்தமாக முடக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் யுடியூப் நிறுவனத்திற்கு மெயில் அனுப்பி உள்ளனர்.

கொரோனா சூழ்நிலையில் சமூகத்தில் ஆளுக்கொரு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், தேவையில்லாமல் குறிப்பிட்ட மதத்தினரையோ, சாதியையோ, இழிவுபடுத்தும் வகையில் யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடும் வில்லங்கச் சிற்பிகளுக்கு இந்த கைது நடவடிக்கை ஒரு எச்சரிக்கை பாடம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments