சாத்தான்குளம் இரட்டை கொலை : 2-ம் கட்டமாக கைது செய்யப்பட்ட 3 போலீசாருக்கு 23-ந் தேதி வரை சிபிஐ காவல்
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் மூன்று பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கை விசாரித்து வரும், சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கில் 2-வது கட்டமாக கைது செய்யப்பட்ட காவலர்கள் 5 பேரில் 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஹேமானந்த குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐயின் மனுவில் குறிப்பிடப்பட்ட காவலர்கள் செல்லதுரை, சாமதுரை, வெயில் முத்து ஆகிய மூவரும் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி, காவலர்கள் 3 பேரையும் வருகிற 23-ந்தேதி வரை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் போலீசார் மூவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி 48 மணி நேரத்தில் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், விசாரணை முடிந்து வருகிற 23-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மீண்டும் காவலர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments