பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் - ராமதாஸ்
பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளை எப்போது திறக்கலாம்? என்பதை இன்றைக்குள் தெரிவிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 40ஆயிரத்து 243 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பள்ளிகளைத் திறப்பது குறித்துச் சிந்திப்பதே பொருத்தமற்ற செயலாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் வகுக்கும் திட்டங்களையெல்லாம் கொரோனா முறியடித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்டுவது எந்த வகையிலும் பயனளிக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா முழுமையாக ஒழிக்கப்படாமல் பள்ளிகளைத் திறந்து, வகுப்புகளில் மாணவர்களை நெருக்கமாக அமர வைத்தால் தீவிர நோய்ப்பரவலுக்கு வழிவகுத்து விடும் என எச்சரித்துள்ளார்.
Comments