மே.வங்க நெடுஞ்சாலையில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை
பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து உள்ளூர் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டதால் மேற்கு வங்க தேசிய நெடுஞ்சாலை வன்முறை களமாக மாறியது.
சமீபத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற இந்த மாணவி காணாமல் போய் பின்னர் மரத்தடி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த இடத்தில் இருந்து சில மொபைல் போன்களும், சைக்கிள்களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த தகவல் வெளியானதும், கொல்கத்தாவில் இருந்து சிலிகுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சோப்ரா என்ற இடத்தில் திரண்ட மக்கள், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 பேருந்துகளும், போலீஸ் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
3 மணி நேரத்திற்கும் பிறகு போராட்டத்தை போலீசார் அடக்கினாலும், அருகில் உள்ள மற்றோர் சாலையில் திரண்ட மக்கள் போலீசார் மீது அம்புகளை விட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதி முழுதும் போர்க்களம் போல காட்சி அளித்தது.
இதனிடையே உடல் கூறாய்வு அறிக்கையில், விஷம் உடலுக்குள் சென்றதால் உயிரிழப்பு எனவும், மாணவியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments