வெளியுறவுத்துறை அனுமதியில்லாமல் அமீரக துணை தூதருக்கு பாதுகாப்பு !கேரள டி.ஜி.பி மீது குற்றச்சாட்டு

0 3391

வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் முறையான அனுமதி பெறாமல், திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் அமீரக தூதரக அதிகாரிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் கடந்த 2016- ம் ஆண்டு முதல் அமீரக நாட்டின் துணை தூதரகம் செயல்பட்டு வருகிறது. துணை தூதராக இருந்தவர் கொரோனா பரவல் காரணமாக அமீரகம் திரும்பி விட்ட நிலையில், ரஷீத் காமிஸ் அல் ஷெமாலி  என்பவர் தற்காலிக துணை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின், பெயரில்தான் துபாயிலிருந்து வந்த பார்சலில் தங்கம் இருந்துள்ளது.

இந்த நிலையில், அமீரக நாட்டின் துணை தூதருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டதில் விதிமுறை மீறல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பொதுவாக தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் விஷயத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம்தான் முடிவெடுக்கும். தூதரகங்கள் வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதிதான் முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

மாநில அரசுப் பணிகளில் உள்ளவர்களிடத்தில் நேரடியாக தொடர்பு கொள்ள தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால், 2017- ம் ஆண்டு அமீரக தூதருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகராவுக்கு தூதரகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கேரள டி.ஜி.பி கடிதத்தை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி அனுமதி பெற்ற பின்னரே தூதருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், லோக்நாத் பெகரா அந்த கடிதத்தை வெளியுறவுத்துறைக்கு அனுப்பாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தூதருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 1968- ம் ஆண்டு இந்திய அரசு சர்வீஸ் சட்டத்தை லோக்நாத் பெகரா மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெயகோஷ் என்பவர் அமீரக துணைதூதருக்கு பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஜெயகோஷ் சமீபத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்றது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள கட்டடங்களுக்கு வெளியேதான் இந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கும். தூதரங்களுக்கு உள்ளே சம்பந்தப்பட்ட நாடுகளே பாதுகாவலர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான், சீன நாட்டு தூதரகங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும். சென்னையிலுள்ள இலங்கை  துணை தூதரகத்துக்கும் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும். அதே போல , இந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் கனடா நாடடிலுள்ள இந்திய தூதரகங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments