வருகிற 29ந் தேதி 5 ரஃபேல் போர்விமானங்கள் இந்தியா வருகை

0 3434
ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் வரும் 29ந் தேதி இந்தியா வந்து சேர்கின்றன.

ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் வரும் 29ந் தேதி இந்தியா வந்து சேர்கின்றன. லடாக்கில் சீன எல்லையையொட்டிய பகுதியில் இந்த விமானங்களை பாதுகாப்பு பணியில் களமிறக்கி எல்லைப் பகுதியை வலுப்படுத்த இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் மிராஜ் 2000, சுகோய் 30, மிக்-29 ரக போர் விமானங்களையும், அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அபாச்சி ரக ஹெலிகாப்டரையும் கொண்டு இந்திய ராணுவம் இரவு பகலாக தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கும் அதிநவீன ரபேல் போர் விமானங்களை எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த விமானப்படை திட்டமிட்டுள்ளது. 36 விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், முதற்கட்டமாக வரும் 29ம் தேதியன்று, அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு 5 விமானங்கள் வந்தடைய உள்ளன. இதில் 3 விமானங்கள் இரு விமானிகளை கொண்டதாகவும், இரு விமானங்கள் ஒரு விமானியை கொண்டதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

ஏர் சுப்பீரியாரிட்டி வகையை சேர்ந்த ரபேல் விமானம் ஸ்நெக்மா எம்-88-2 டர்போஃபேன் என்ற இரட்டை எஞ்சின்களை கொண்டிருப்பதால், அனைத்து காலநிலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதோடு, அதிக பாதுகாப்பு திறன் கொண்டதாகவும் விளங்குகிறது.

ரபேல் விமானங்கள் வானிலிருந்து தரை இலக்குகளையும், வான் இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டது. இந்தியா வர உள்ள விமானங்கள் 300 கிமீ தூரத்தில் தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகனைகளை செலுத்தும் திறன் கொண்டதாக இருக்கும், அதே சமயம் வான்வெளி ஏவுகணைத் தாக்குதல் திறனை மேம்படுத்த சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரபேல் போர் விமானம் 15.3 மீட்டர் நீளம், 10.9 மீட்டர் அகலம், 5.3 மீட்டர் உயரம் கொண்டது. எதிரியின் ரேடாரிலிருந்து எளிதாக தப்பும் வகையிலான வடிவமைப்பு அம்சங்களை கொண்டு இருப்பதோடு, மணிக்கு 2,130 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டுள்ளதால் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்படக் கூடியது.

இதனிடையே, டெல்லியில் வரும் 22ம் தேதி முதல் 2 நாள்கள் நடைபெறவுள்ள இந்திய விமானப்படை கமாண்டர்கள் மாநாட்டில், இந்திய சீன எல்லைப் பகுதியில் அதிநவீன ரபேல் ரக விமானங்களை நிறுத்துவது குறித்து விமானப்படையினர் விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments