தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 4979 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 4 ஆயிரத்து 979 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 53 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை, அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில், 4 ஆயிரத்து 979 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 78 பேர் பலியாயினர். மதுரையில் 22 வயது இளைஞர் ஒருவரும், சென்னையில் 92 வயது முதியவர் ஒருவரும் தனியார் மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். திருவள்ளூரில் 32 வயது பெண் ஒருவர் அரசு
மருத்துவமனையில் மரணம் அடைந்தார். எனவே, தமிழகத்தில் கொரோனா உயிர்ப்பலி 2 ஆயிரத்து 481 ஆக உயர்ந்தது.
கொரோனா பரிசோதனை, இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் சுமார் 53 ஆயிரமாக உயர்த்தப்பட்டதால், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 19 லட்சத்து 32 ஆயிரத்தைத் தாண்டியது.
ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்ததால், இதுவரை சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேநேரம், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக பதிவாகி உள்ளது.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 4 ஆயிரத்து 788 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மட்டும் 690 என தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, உள்நாட்டில் விமானங்கள் மூலம் திரும்பிய 443 பேரும், ரெயில், பேருந்து மற்றும் இதர வாகனங்கள் மூலம் திரும்பிய 3,655 பேரும் இதில் அடங்குவர் என விளக்கம் அளித்துள்ளது. ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட பிறகு, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 4 லட்சம் பேர் தமிழகம் திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக 1,254 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. சென்னையில் மட்டும் சுமார் 86 ஆயிரம் பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேநேரம், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.
அண்டை மாவட்டங்களான திருவள்ளூரில் அதிகபட்சமாக 405 பேருக்கும், செங்கல்பட்டில் 306 பேருக் கும் , காஞ்சிபுரத்தில் 220 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆனது. விருதுநகரில் 265, மதுரையில் 206, தூத்துக்குடியில் 151, திண்டுக்கல்லில் 139, திருச்சியில் 138, கோவையில் 135, வேலூரில் 133, கன்னியாகுமரியில் 131 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ((சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்து 725 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments