சீன எல்லை நிலவரம்: இந்திய விமானப்படை கமாண்டர்கள் விரைவில் ஆலோசனை
லடாக்கில் சீன எல்லையையொட்டிய பகுதியில் நிலவும் பதற்றம் குறித்து இந்திய விமானப்படை கமாண்டர்கள் இந்த வாரம் கூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.
லடாக்கின் கிழக்கு பகுதியிலுள்ள கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்கள் இடையேயான மோதல் சம்பவத்தால் இருநாடுகள் இடையேயும் போர் பதற்றம் நிலவுகிறது. அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கையில் இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் போதிலும், அந்த பதற்றம் இன்னும் தணியாமல் உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இந்திய விமானப்படை கமாண்டர்கள் மாநாடு (( two-days commanders' conference ))22ம் தேதி முதல் 2 நாள்கள் நடைபெறவுள்ளது. விமானப்படை தளபதி பதெளரியா தலைமையில் நடைபெறும் அந்த மாநாட்டில் விமானப்படை பிரிவின் 7 கமாண்டர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டில் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. முக்கியமாக, சீன எல்லை நிலவரம் குறித்தும், கிழக்கு லடாக் மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் வீரர்கள் குவிக்கப்பட்டது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
சீன எல்லையையொட்டிய பகுதிகளில் மிராஜ் 2000, சுகோய் 30, மிக்-29 ரக போர் விமானங்களையும், அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அபாச்சி ரக ஹெலிகாப்டரையும் இந்தியா நிறுத்தியுள்ளது. அப்பகுதிகளில் அந்த விமானங்களும், ஹெலிகாப்டரும் இரவு பகலாக தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டால் இந்த மாத இறுதியில் அளிக்கப்படவுள்ள அதிநவீன ரபேல் போர் விமானங்களை எல்லையில் நிறுத்துவது, கண்காணிப்பில் அந்த விமானங்களை ஈடுபடுத்துவது குறித்து கமாண்டர்கள் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
Comments