சென்னையில் தொற்று பரிசோதனையின்போது போலி முகவரி தருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னையில் போலி முகவரி கொடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு, தனியார் மற்றும் மாநகராட்சி சார்பில் காய்ச்சல் முகாம்கள் மற்றும் பரிசோதனை முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பரிசோதனைக்கு உட்படும் நபர் முடிவுகள் வெளியாகும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் நிலையில் இதற்குப் பயந்து பலரும் போலி முகவரி மற்றும் தகவல் கொடுத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 273 பேர் போலியான தகவல் தந்துள்ளதாக மாநகராட்சி அளித்த புகாரின்பேரில், தனிப்படை அமைத்து போலீஸார் பலரை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் ஜூலை14ஆம் தேதி 160 பேரும், 15ஆம் தேதி 177 பேரும் போலியான முகவரி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
அவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் பரிசோதனை செய்யப்பட்ட 10ஆயிரத்து 243 பேரில், 171பேர் போலியான தகவல் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
போலியான தகவல்கள் அளிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, கொரோனா தடுப்பு பணியில் மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தொற்று பரிசோதனையின்போது போலி முகவரி தருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு #Chennai #CoronaTest https://t.co/PBe13tZeUG
— Polimer News (@polimernews) July 19, 2020
Comments