நாசிக் டூ திருவனந்தபுரம்... நாள் ஒன்றுக்கு 5 கி.மீ ஓட்டம்... 10 மாதங்கள் பயணித்த பிரமாண்ட டிரக்!

0 32182

நாசிக்கிலிருந்து விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்துக்குத் தேவையான ’ஏரேஸ்பேஸ் ஆட்டோகிளேவ்’ எனும் பிரமாண்ட கருவியை ஏற்றிக் கொண்டு பத்து மாதங்களுக்கு முன் கிளம்பிய டிரக் இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தது. 

திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உள்ளது. செயற்கைக்கோள் உந்துசக்தி மேம்படுத்துதல், அது தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்கும் முக்கியமான ஆய்வு மையம் இது. இங்குதான் இந்தியாவின் விண்வெளி ஆய்வு தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விக்ரம் சாராபாய் நிறுவனத்துக்காக, அதிக வெப்பம் மற்றும் அதிக அழுத்தத்தைத் தாங்கும் வகையிலான ‘ஏரேஸ்பேஸ் ஆட்டோகிளேவ்’ எனும் கருவியை நாசிக்கில் உள்ள யுனிக்யூ கெமோ நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது. இந்த பிரமாண்ட கருவியை நாசிக்கிலிருந்து 1761 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரும் பணி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கியது.

இந்தப் பிரமாண்ட கருவி 70 டன் எடை கொண்டது. 7.5 மீட்டர் நீளமும் 6.65 மீட்டர் அகலமும் கொண்டது. அதிக எடை கொண்ட இந்தக் கருவியை சுமர்ந்து செல்ல 74 டயர்கள் கொண்ட பிரத்யேக டிரக் பயன்படுத்தப்பட்டது. இந்த டிரக் 32 பேரால் இயக்கப்பட்டது. அதிக எடை காரணமாக இந்த டிரக் சாலையில் செல்லும் போது மற்ற வாகனங்கள் செல்வது தடை விதிக்கப்பட்டது. இதனால், நாள் ஒன்றுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணித்தது.

தற்போது இந்த டிரக் ,பத்து மாதங்களுக்குப் பிறகு நான்கு மாநிலங்களைக் கடந்து திருவனந்தபுரத்தை எட்டியுள்ளது, ’ஏரேஸ்பேஸ் ஆட்டோகிளேவ் கருவி ஒரு மாதத்துக்குள் விக்ரம்  சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நிறுவப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments