' என் தாய்க்கு கடைசி வரை இழப்பீடு கிடைக்கவில்லை!' - ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி வருத்தம்

0 11359

உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி நாளையுடன் ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தில் நேற்று அவருக்கு கடைசி வேலை நாள். பிரிவுபசார விழாவில் நேற்று காணோலியில் பானுமதி உரையாற்றினார். அப்போது, '' எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போது என் தந்தையை பேருந்து விபத்தில் இழந்தேன். என் தாயார் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக உத்தரவிட்டாலும் நடைமுறை சிக்கல்கள் , குழப்பமான நடைமுறைகள், முறையான உதவி கிடைக்காததால் எங்களால் இழப்பீட்டை பெற முடியவில்லை.

என்னுடைய தாயார், நான் எனது இரு சகோதரிகள் கூட நீதிமன்ற நடைமுறை சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான். இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நேற்று வரை எங்களுக்கு அந்த இழப்பீடு கிடைக்கவில்லை என்பதுதான். நீதித்துறை பணியை பொறுத்த வரை மலையளவு தடைகளை எதிர்கொண்டுள்ளேன் . நீதித்துறையை வலுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் போதுமானளவு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன '' என்றார்.

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக மூன்று பெண் நீதிபதிகள் இப்போது பணியாற்றி வந்தனர். பானுமதி தவிர இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் பெண் நீதிபதிகள். தற்போது உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் எண்ணிக்கை இரண்டாகியுள்ளது.image

தமிழகத்தை சேர்ந்த பானுமதி 1988-ம் ஆண்டு செசன்சு நீதிபதியாக பணியை தொடங்கினார். 30 ஆண்டுகள் நீதித்துறையுடன் இணைந்து பணியாற்றிய பானுமதி 2003- ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானார். தொடர்ந்து 2014- ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தின் 6- வது பெண் நீதிபதி இவர். உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் இடம்பெற்ற இரண்டாவது பெண் நீதிபதி பானுமதி. முன்னதாக, நீதிபதி ரூமா பால் கொலிஜியத்தில் இடம் பெற்றிருந்தார். 2006- ம் ஆண்டு ரூமாபால் ஓய்வு பெற்றார்.

தமிழகத்தை அதிரவைத்த பிரேமனந்தா வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி இவர்தான். அப்போது, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாக பானுமதி இருந்தார். இந்தியாவே அதிர்ந்த நிர்பயா வழக்கில் ஆர். பானுமதி தலைமையிலான அமர்வுதான் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments