டாக்ஸி ஓட்டுனர் டூ வெங்காய வியாபாரி..! மாற்றம் ஒன்றே மாறாதது
திருவண்ணாமலையில் கடன் பெற்று வாங்கிய டாக்ஸிக்கு, தவணை தொகை கட்ட இயலாமல் தவித்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், டாக்ஸியின் இருக்கைகளை கழற்றிவிட்டு அதில் வெங்காய மூட்டைகளை ஏற்றி விடாமுயற்சியுடன் வெங்காய வியாபாரம் செய்து வருகின்றார்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்ஸி ஓட்டுநர் முருகன். தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி வாடகைக்கார் ஒன்றை வாங்கி ஓட்டிவந்தார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வாடகை காரை இயக்க இயலாத காரணத்தால் வேலை மற்றும் வருமானமின்றி சாப்பாடு செலவுக்கே தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதற்கிடையே இவர் கடன் பெற்ற நிறுவனம் மாத தவணை கட்டச் சொல்லி வற்புறுத்தியதால் என்ன செய்வதென்று யோசித்த முருகன், டாக்ஸியை வெங்காய வண்டியாக மாற்ற திட்டமிட்டார்.
அதன்படி பயணிகள் இருக்கையை கழற்றி விட்டு பூண்டு, வெங்காய மூட்டைகளையும், வெங்காய கூடைகளையும் கடனுக்கு வாங்கி வியாபாரத்தை தொடங்கினார் முருகன். டாக்ஸியின் மேல் ஒலிப்பெருக்கியை பொறுத்தி வீதி வீதியாக காரில் சென்று வெங்காய விற்பனையை செய்து வருகின்றார்.
வாடகைக் கார்களுக்கு சாலைவரி, காப்பீடு போன்ற செலவுகளும் இருப்பதால் வெங்காய வருமானத்தில் கிடைக்கின்ற பணம் குடும்பத்தை நடத்துவதற்கே சிரமமாக இருப்பதாக தெரிவிக்கும் ஓட்டுநர் முருகன், தனியார் நிதி நிறுவனங்களிலும் தவணை தொகைகளையும், சாலைவரி, காப்பீட்டுத் தொகையையும் இயல்பு நிலை திரும்பும் வரை ரத்து செய்வதோடு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உழைப்பை முடக்கி போட்ட கொரோனா ஊரடங்கால் ஓட்டுநர் முருகனின் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் முடக்கி போட இயலவில்லை. இந்த உலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது மற்றவை எல்லாம் சூழ்நிலைக்கு ஏற்ப மாற கூடியவை என்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி.
டாக்ஸி ஓட்டுனர் டூ வெங்காய வியாபாரி..! மாற்றம் ஒன்றே மாறாதது | #Tiruvannamalai | #Onion | #TaxiDriver https://t.co/vtSLziaqXf
— Polimer News (@polimernews) July 18, 2020
Comments