உலகின் எந்த சக்தியாலும், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட அபகரித்து விட முடியாது -ராஜ்நாத் சிங்

0 3949

லடாக் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். உலகின் எந்த சக்தியாலும், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட அபகரித்து விட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். இன்று காலை லே விமான நிலையம் சென்று இறங்கிய அவர், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் நரவானே ஆகியோருடன், ஸ்டக்னா (Stakna) என்ற முன்களப் பகுதிக்கு சென்றார். அங்கு, அவர் முன்னிலையில், டி-90 பீஷ்மா டாங்குகள் இயக்கிக் காட்டப்பட்டது.

இந்த டி-90 பீஷ்மா டாங்குகள், கால்வன் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு கடந்த ஜூன் மாதத்தில் கொண்டு செல்லப்பட்டன. சீன ராணுவம் எல்லைக்கு அருகே படைநிலைகளை வலுப்படுத்தியதைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக இந்தியாவும் கனரக ஆயுத தளவாடங்களை நகர்த்தியது.

அதில், டி-90 பீஷ்மா டாங்குகள் முக்கியமாக இடம்பெற்றன. அவற்றின் வல்லமையை தெரிவிக்கும் வகையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இயக்கிக் காட்டப்பட்டன. BMP ரக பீரங்கி-கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றின் பயிற்சியையும் பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்து ராஜ்நாத் சிங்கிற்கு விளக்கப்பட்டது. அப்போது Pika எந்திரத் துப்பாக்கியை, பாதுகாப்பு அமைச்சர் சோதித்துப் பார்த்தார். எல்லைகளை பாதுகாத்து நிற்கும் வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து திறமைகளை வெளிப்படுத்தினர். போரில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். 

இதைத் தொடர்ந்து, லடாக்கின் லூக்குங் பகுதிக்கு சென்ற ராஜ்நாத் சிங், படை வீரர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்திய-சீன வீரர்களிடை ஏற்பட்ட மோதலை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், எல்லையை பாதுகாக்கும் உன்னதப் பணியில் இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததாக குறிப்பிட்டார்.

வீரர்களின் உயிரிழப்பு துயரத்தை ஏற்படுத்துகிறது என்றும், வீரமரணம் அடைந்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார். உலகின் எந்த சக்தியாலும், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட அபகரித்து விட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

லடாக் பயணத்தை முடித்துக் கொண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றார். ஜம்மு-காஷ்மீரில் நாளை முன்களப் பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments