‘கொரோனா பரவினால்தான் மக்களைக் காக்க முடியும்’ - ஊரடங்கை அமல்படுத்தாத ஸ்வீடன் சாதித்ததா அல்லது சறுக்கியதா?

0 16860

கொள்ளை நோயாகப் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, கொரோனா நோய்த் தொற்று. ஒவ்வொரு நாட்டிலும் கால நிலைக்கு ஏற்ப வடிவத்தை மாற்றி மக்களைக் கொல்கிறது கொரோனா. மக்கள் கதவுகளை அடைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயின. கொரோனா வைரஸை பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற உலகம் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் ’ஊரடங்கு’. உலகமே  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த  ஊரடங்கை அமல்படுத்திய போது, ஒரு நாடு மட்டும் 'நாங்கள் ஊரடங்கை அமல்படுத்தப்போவதில்லை' என்று அறிவித்தது.  அந்த நாடுதான் ஸ்வீடன்.

பொதுவாக, நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க இரண்டு வழிகள் உண்டு. ஒன்று தடுப்பூசி போட்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வது. இரண்டாவது, அந்த நோய் தாக்கி, உடலில் இயல்பிலேயே நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி தோன்றுவது. இதில், இரண்டாவது வழிமுறையைக் கையில் எடுத்தது ஸ்வீடன். வித்தியாசமான யுக்தியாக, சமுதாய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது (Herd immunity)  எனும் திட்டத்தைச் செயல்படுத்தியது.

ஒரு நாட்டில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு, எதிர்ப்பு சக்தி தோன்றிவிட்டால் அங்கு நோய் பரவல் ஏற்படாது' என்கிற கருத்து  மருத்துவத்துறையில் உண்டு. இதை சமுதாய நோய் எதிர்ப்பு சக்தி (Herd immunity) என்று கூறுவர். முள்ளை முள்ளால் எடுக்கும் உத்தி இது. இந்த யுக்தியால் கொரோனாவை வீழ்த்தியதா ஸ்வீடன் என்றால் இரு வேறு முடிகளை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 

புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன?  

சமுதாயத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு நோய்த் தொற்றுப் பரவல் ஏற்பட வேண்டும் என்று கருதிய ஸ்வீடன் அரசு ஊரடங்கை முறையாக அறிவிக்கவில்லை. வயது முதிர்ந்தவர்கள் மட்டும் வீடுகளிலும், முதியோர் இல்லங்களிலும் பாதுகாப்பாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. மற்றபடி எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மால்கள் அனைத்தும் இயங்கின. விழாக்களில் பங்கேற்கக் கூட 50 பேர் வரை கூட அனுமதி வழங்கப்பட்டது. இதனால், அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவால் ஸ்வீடனில் அதிக பாதிப்பு ஏற்பட்டது.

அண்டை நாடுகளுடன்  ஒப்பிடுகையில் ஸ்வீடனில் கொரோனா பாதிப்பு விகிதமும், இறப்பு விகிதமும் பலமடங்கு அதிகமாகவே உள்ளது. ஒருகோடி பேரை மட்டுமே மக்கள் தொகையாகக் கொண்ட ஸ்வீடனில் இதுவரை கொரோனா நோய் தாக்குதலால் 76,877 பேர் பாதிக்கப்பட்டு, 5593 பேர் இறந்துள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில், உலகிலேயே ஸ்வீடனில் தான் இறப்பு விகிதம் அதிகம் என்கின்றன புள்ளி விவரங்கள்.

image

அமெரிக்காவில் இதுவரை 1,38,000 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். ஸ்வீடனில் 5593 பேர்  இறந்துள்ளனர். எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் ஸ்வீடனில் இறப்பு விகிதம் குறைவாகவே தோன்றும். ஆனால், நாட்டின் மொத்த மக்கள் தொகையின் அடிப்படையில் ஆராய்ந்தால் இந்த பாதிப்பு மிக அதிகம். 10 லட்சம்  பேருக்கு ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை ஆராய்ந்தால், ஸ்வீடன் நாட்டில் அமெரிக்காவை விட 40 மடங்கு, நார்வேயை விட 12 மடங்கு, பின்லாந்தை விட 7 மடங்கு, டென்மார்க்கை விட 6 மடங்கு அதிக அளவில் இறப்பு பதிவாகியுள்ளது. இது கவலை தரக்கூடிய விஷயமாகும்.

ஸ்வீடன் அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தாததற்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. அதுதான் பொருளாதாரம். ஆனால், பொருளாதாரத்தையும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. ஸ்வீடன் மத்திய வங்கியின் புள்ளிவிவரத்தின் படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவிகிதமாக சுருங்கியுள்ளது. இதற்கு முன்பு , அதன் உள்நாட்டு உற்பத்தி 1.3 சதவிகிதம் உயரும் என்று மதிப்பிடப்பட்டது.  கணிப்புக்கு மாறாகத் தற்போது பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.  வேலையின்மை  7.1 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் என்று சொல்லப்பட்டுள்ளது.

image

வாஷிங்கடன்  பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் ஜேகப், “ஊரடங்கை அமல்படுத்தாததால்  ஸ்வீடன்  உண்மையில் எந்த ஆதாயத்தையும் பெறவில்லை. ஸ்வீடன் நாட்டு அரசே தங்கள்  மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த பொருளாதார லாபத்தையும் அவர்கள்  பெறவில்லை” என்று கூறுகிறார்.

ஸ்வீடன் நாட்டின் மாறுபட்ட அணுகுமுறையால், தற்போது அந்த நாட்டில் பாதிப்பு குறைந்து வருவதைப் புள்ளி விவரத்தின் மூலம் அறிய முடிகிறது. ஏப்ரல் மாதத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். அதன்பிறகு , இறப்பு விகிதம் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் ஒற்றை இலக்கத்தில் தான் இறப்பு ஏற்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் அதிகமாக ஏற்பட்ட நோய்த் தொற்று பரவல் வேகம் தற்போது குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

கொரோனாவுக்கு எதிரான போரில் உலகமே ஒரு பாதையில் செல்ல, ஸ்வீடன்  வேறொரு பாதையில் பயணித்தது. தற்போது பாதிப்பு விகிதம் குறைந்துள்ளதால், அந்த நாட்டு அரசு சற்று நிம்மதியடைந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments