ஃபோக்ஸ்வேகன், ஆடி கார் தயாரிப்பு நிறுவனங்கள் மீது இந்தியாவில் முதல் முறையாக வழக்குப் பதிவு

0 5258
ஃபோக்ஸ்வேகன், ஆடி கார் தயாரிப்பு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு

மாசு உமிழ்வை குறைத்துக் காட்டும் கருவியை காரில் பொருத்தி, ஏமாற்றியதாக, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார் தயாரிப்பு நிறுவனங்கள் மீது இந்தியாவில் முதல் முறையாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த Aniljit Singh என்பவர், மாசு உமிழ்வை மறைக்கும் வகையில் ஏமாற்றுக் கருவி பொருத்தியதாக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது ஏற்கெனவே சர்வதேச அளவில் எழுந்த குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி புகார் அளித்துள்ளார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில், 2018ஆம் ஆண்டில் 7 ஆடி கார்களை வாங்கியதாகவும், அப்போது மாசு உமிழ்வை மறைக்கும் கருவி ஏதும் பொருத்தப்பட்டுள்ளதா என விசாரித்ததாகவும், புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மாசு உமிழ்வு தொடர்பான விதிமுறைகள் அவ்வளவு கடுமையானவை அல்ல என்பதாலும், இந்தியா ஆடி கார்களுக்கு வளர்ந்து வரும் சந்தையாக இருப்பதாலும் அப்படிப்பட்ட கருவி ஏதும் பொருத்தவில்லை என்று நிறுவனத்தினர் பதிலளித்ததாகவும் புகார்தாரர் கூறியுள்ளார்.

ஆனால், ஆடி கார்களின் நைட்ரஜன் ஆக்சைடு மாசு உமிழ்வு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட 5 முதல் 8 மடங்கு அதிகமாக இருப்பது இந்தியாவில் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளால் கண்டறியப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதித்ததாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்தே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும் புகார்தாரர் கூறியுள்ளார். போலி ஆவணங்கள் மற்றும் மோசடிக் கருவிகள் மூலம் தம்மை ஏமாற்றி, இழப்பு ஏற்படுத்தி விட்டதாகவும் புகார்தாரர் குற்றம்சாட்டியுள்ளார்.

சந்தையை கைப்பற்றும் நோக்கில், தீய உள்நோக்கம், சதித் திட்டத்துடன், தரங்குறைந்த கார்களை விற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளதாகவும், உரிய அங்கீகாரம் பெறும் நிலைகளிலும் தவறான ஆவணங்களை கொடுத்து ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ள புகார்தாரர் இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின்பேரில், இந்தியா, ஜெர்மனியில் உள்ள ஆடி மற்றும் ஃபோக்ஸ்வேகன் தலைமை அலுவலக உயரதிகாரிகள் மீது, நொய்டாவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆடி இந்தியா பிராண்ட் இயக்குநர் ரஹில் அன்சாரி, ஆடி இந்தியா தலைவர் பல்பிர் சிங் தில்லான், ஜெர்மனியை சேர்ந்த ஆடி ஏஜி நிறுவனத்தின் தலைவர் பிராம் ஸ்காட் உள்ளிட்டோரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஏமாற்று, மோசடி, குற்றச்சதி தொடர்பான இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments