இந்தியாவிலேயே பணக்காரப் பெண்... 38 வயதில் ஹெச்.சி.எல்- லின் புதிய தலைவரான ரோஷினி நாடார்!

0 21873

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷினி நாடார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சிவநாடாருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய ஐ.டி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் 1,50,287 ஊழியர்கள் பணி புரிகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக சிவநாடார் இருந்து வந்தார். இந்த நிலையில், சிவநாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்கோத்ரா இன்று ஹெச்.சி.எல்லின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதே வேளையில், சிவ நாடார் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை வியூக வடிவமைப்பாளர் என்ற புதிய பொறுப்புடன் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் செயல்படுவார். இதுநாள் வரை, ரோஷினி நாடார் ஹெச்.சி.எல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஹெச். சி.எல் டெக்னாலஜிநிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். சென்னையில் உள்ள சிவ சுப்ரமணிய நாடார் இன்ஜினியரிங் கல்லூரியை நடத்தி வரும் சிவநாடார் அறக்கட்டளையில் உறுப்பினராவும் ரோஷினி நாடார் உள்ளார்.

கடந்த 2019- ம் ஆண்டு IIFL Wealth Hurun India வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்தியாவிலேயே பணக்கார பெண் ரோஷினி நாடார் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ 31400 கோடி ஆகும். கடந்த 2017, 2018, 2019 ஆண்டுகளில்  தொடர்ச்சியாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 100 செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் ரோஷினி இடம் பெற்றிருந்தார். டெல்லியில் பிறந்த ரோஷினி, அமெரிக்காவின் Kellogg School of Management, பல்கலையில் எம்.பி .ஏ பட்டம் பெற்றவர். தற்போது, 38 வயதாகும் ரோஷினியின் கணவரின் பெயர் ஷிக்தர் மல்கோத்ரா. ‘இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

பிசினஸ் தவிர பெண்கள் மேம்பாடு, வனஉயிரின பாதுகாப்பு போன்றவற்றில் அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் ரோஷினி நாடார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments