லடாக்கின் லே பகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு
லடாக் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.
பிரதமர் மோடி அண்மையில் லடாக்கின் முன்களப் பகுதிகளுக்கு சென்று, எல்லையை காத்து நிற்கும் வீரர்கள் மத்தியில் உரையாற்றித் திரும்பினார்.
இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். இன்று காலை லே விமான நிலையம் சென்று இறங்கிய அவர், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் நரவானே ஆகியோருடன், ஸ்டக்னா (Stakna) என்ற முன்களப் பகுதிக்கு சென்றார். அங்கு, அவர்கள் முன்னிலையில், எல்லைகளை பாதுகாத்து நிற்கும் வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து திறமைகளை வெளிப்படுத்தினர்.
பின்னர் வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்து ராஜ்நாத் சிங்கிற்கு விளக்கப்பட்டது.
எல்லையில் கண்காணிப்புக்காக ரோந்து பணியில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
ராணுவம் பயன்படுத்தும் டி-90 டாங்குகள், BMP பீரங்கி-கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றின் பயிற்சியையும் பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டார்.
இன்று லடாக்கில் ஆய்வை முடித்துக் கொண்டு, நாளை ஜம்மு-காஷ்மீரிலும் எல்லை நிலவரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
இதைத் தொடர்ந்து, லடாக்கின் லூக்குங் பகுதிக்கு சென்ற ராஜ்நாத் சிங், படை வீரர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்திய-சீன வீரர்களிடை ஏற்பட்ட மோதலை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், எல்லையை பாதுகாக்கும் உன்னதப் பணியில் இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததாக குறிப்பிட்டார்.
வீரர்களின் உயிரிழப்பு துயரத்தை ஏற்படுத்துகிறது என்றும், வீரமரணம் அடைந்த அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார். உலகின் எந்த சக்தியாலும், இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட அபகரித்து விட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Comments