கருப்பர் கூட்டம்… கம்பி எண்ணும் கூட்டமானது..! தாடிமீசையை மழித்து சரண்

0 53925
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய நாத்திகன் சிக்கினார்

தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமான் குறித்தும் கந்தசஷ்டி கவசம் குறித்தும் ஆபாசமாகவும் அறுவெறுக்கத்தக்க வகையிலும் விமர்சித்து கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட நாத்திகன், தாடி மீசையை மழித்துக் கொண்டு போலீசில் சரண் அடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது...

கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் யூடியூப் சேனல் ஒன்றில் தொடர்ந்து இந்து மதக் கடவுள்களை ஆபாசமாக விமர்சித்தும், புராணங்களை கேலி செய்தும், தொடர்ந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன.

இதன் தொடர்ச்சியாக நாத்திகன் சுரேந்திரன் என்பவன், தாடி மீசையுடன், கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமாகவும் அறுவெறுக்கத்தக்க வகையிலும் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்தான்.

தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகபெருமானை இழிவுபடுத்திய இந்த வீடியோ, கோடான கோடி தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. பாரதீய ஜனதாவின் வழக்கறிஞர் அணி தலைவர் பால்கனகராஜ் அளித்த புகாரின் பேரில் சுரேந்திரன் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனலை நடத்தி வந்த வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை போரூரில் காதல் மனைவி கிருத்திகாவுடன் வசித்து வந்த சுரேந்திரன், முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடினான். முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால், வீடியோவில் விஞ்ஞானி போல ஊருக்கே கருத்துச் சொன்ன கருப்பர் கூட்டம் நாத்திகன் நடுக்கம் அடைந்து, எதிர்ப்புகளுக்கு அஞ்சி தமிழகத்தில் இருந்து ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

தப்பிச் செல்லும்போது தன்னை யாரும் அடையாளம் கண்டுக் கொள்ளக்கூடாது என்பதற்காக தன்னுடைய தாடியையும் மீசையையும் மழித்துக் கொண்டு, புதுச்சேரிக்கு சென்று, தி.க மாணவர் கூட்டமைப்பு மற்றும் பெரியார் தி.க ஆதரவாளர்களுடன் பதுங்கி இருந்த சுரேந்திரன், வியாழக்கிழமை, அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைய வந்திருப்பதாக தெரிவித்தான். இதுகுறித்து, புதுச்சேரி போலீசார் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு காத்திருந்த நேரத்தில் தன்னை போராளி போல காட்டிக் கொண்ட சுரேந்திரன் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தான். ஆனால், அடுத்த நொடியே அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டதால் சர்ச்சை உருவானது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை நடுரோட்டில் தீவைத்து எரித்த, தந்தை பெரியாரின் தொண்டர்கள் நாங்கள் என்று வீராவேசமாக முழக்கமிட்ட தி.க.வினரை தடுத்த சுரேந்திரன், யுடர்ன் அடித்து சம்பந்தமே இல்லாமல் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டு சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

அதனைத்தொடர்ந்து, விசாரணைக்காக தமிழக போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட சுரேந்திரன் அங்கிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

இந்தியாவில், மனிதராய் பிறந்த ஒவ்வொருவரையும், குறிப்பிட்ட சாதி, குறிப்பிட்ட மதம் என்ற அடிப்படையிலேயே அரசு வரையறை செய்து சலுகைகளை வழங்கி வரும் நிலையில், அவரவர் மதக் கடவுள்களை வணங்குவது, அவர்களது தனிப்பட்ட உரிமை என்றும், அதனை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஆபாசமாக பேசி சமூகத்தில் பிரச்சனைகளை உருவாக்குவது தண்டனைக்கு உரிய குற்றம் என்றும், எச்சரித்துள்ளனர் காவல்துறையினர்.

அதே நேரத்தில் தமிழ் கடவுளை விமர்சித்ததால் கறுப்பர் கூட்டம் தற்போது கம்பி எண்ணும் கூட்டமாக மாறியுள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments