எல்லையில் ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் புறப்பட்டார்

0 1945
சீனா வாபஸ் பெற்ற இடங்களை 10 நாட்கள் ராணுவம் ஆய்வு செய்ய திட்டம்

லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் வாபஸ் பெற்று வரும் நிலையில்,  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை லடாக் புறப்பட்டுச் சென்றுள்ளார். சீனா வாபஸ் பெற்ற பகுதிகளை 10 நாட்களுக்கு ஆய்வு செய்ய இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. 

லடாக்கில் அண்மையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் தரப்பில் 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. செவ்வாயன்று நடைபெற்ற 14 மணி நேரப் பேச்சுவார்த்தையின் போது படைகளை முழுவதுமாக விலக்கிக் கொள்ளுமாறு இந்திய ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கல்வான் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சீனா ஒப்புக் கொண்டபோதும் ஃபிங்கர் மலைத்தொடரின் சில பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் அமைதிப் பேச்சுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறியவும் களத்தில் நிற்கும் வீரர்களை சந்தித்து உரையாடவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டமிட்டுள்ளார். ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளும் ராஜ்நாத் சிங் உடன் செல்கின்றனர். பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சில பகுதிகளுக்கும் ராஜ்நாத்சிங் செல்ல திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து முழுமையாக படைகளை விலக்குவதற்கு இந்தியா மற்றும் சீனா ராணுவ தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வலியுறுத்தலை அடுத்து, கல்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்க்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சீன படைகள் பின்வாங்கி விட்டன. ஃபிங்கர் போர் என்ற இடத்திலும் கணிசமான படைகள் குறைக்கப்பட்டன.

பேச்சுவார்த்தையில் கூறப்பட்டபடி, சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து சீனா படைகளை விலக்கிக் கொண்டதா என்பதை அடுத்த பத்து நாட்களுக்கு ஆய்வு செய்ய இந்திய ராணுவ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று காலை லடாக் புறப்பட்டுச் சென்றுள்ள ராஜ்நாத்சிங் இதுகுறித்தும் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments