பரஸ்பர படை விலக்கம்.! சரிபார்ப்பு அவசியம்.!

0 2153
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து முழுமையாக படைகளை விலக்குவதற்கு இந்தியா மற்றும் சீனா ராணுவ தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து முழுமையாக படைகளை விலக்குவதற்கு இந்தியா மற்றும் சீனா ராணுவ தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 

கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

சீன ராணுவம் தரப்பில் ஏற்பட்ட இழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து எல்லையில், இரு நாட்டு ராணுவமும் படைகளை குவித்ததால் பதற்றம் அதிகரித்தது.

இதையடுத்து பதற்றத்தை தணித்து படைகளை விலக்குவதற்காக இருதரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் இடையே தொலைபேசி மூலம் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி முதன் முறையாக படைவிலகலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை இருதரப்பு கமாண்டர்கள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமார் 15 மணி நேரம் வரை நீடித்தது.

அதன்படி, இருதரப்பும் எல்லையில் இருந்து முழுமையாக படைகளை விலக்குவதற்கு உறுதிபூண்டுள்ளதாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை செயல்படுத்துவதற்கு நிலையான சரிபார்ப்பு அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல்கட்ட படை விலகல் குறித்து இருதரப்பு மூத்த கமாண்டர்கள் மட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகவும், முழுமையான படை விலகலுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்த கட்ட ராணுவம் மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான சந்திப்பு மூலம் இதனை முன்னெடுத்துச் செல்லவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விரைவாக படைகளை விலக்குவது கடினம் என்றும், மேலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவது அவசியம் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 5வது கட்ட பேச்சுவார்த்தை இன்னும் சில தினங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வலியுறுத்தலை அடுத்து, கல்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங்க்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சீன படைகள் பின்வாங்கி விட்டன. பிங்கர் போர் என்ற இடத்திலும் கணிசமான படைகள் குறைக்கப்பட்டன.

பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், எந்த சவாலையும் எதிர்கொள்ளும் விதத்தில் லடாக்கை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனிடையே பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ தளபதி நரவானேவுடன் இணைந்து வெள்ளிக்கிழமை லடாக் செல்ல இருக்கிறார். இந்திய ராணுவத்தின் தயார் நிலை மற்றும் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து அவர் ஆய்வு செய்ய இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments