முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 382.89 கோடி கிடைக்க பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல்
முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 382 கோடியே 89 லட்சம் கிடைக்கப் பெறுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை வழக்கறிஞர் ஒருவர், இதுதொடர்பாக தாக்கல் செய்த வழக்கில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், கொரோனாவுக்கு நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு? பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படவில்லை எனவும், அதை வெளியிட உத்தரவிட வேண்டுமெனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில், அரசு அலுவலகங்களில் குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிக்கு வருவதாலேயே இது குறித்த முழுமையான விவரங்களை வெளியிட தாமதமாகிறதே தவிர, இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கிடைக்கப்பெற்ற தொகை விபரம், நிதி வழங்கியவர்கள் யார் யார்? பயனாளிகள் யார் யார்? என்பன உள்ளிட்ட விபரங்களை அதற்கென்ன உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் 8 வாரத்திற்குள் வெளியிட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Comments