8 வருடங்கள், 263 கோடி ரூபாய்... பீகாரில் திறக்கப்பட்ட 29 நாளில் இடிந்து விழுந்த பாலம்!

0 88367
இடிந்து விழுந்த கண்டகி ஆற்றுப் பாலம்

பீகாரில் கண்டகி ஆற்றின் குறுக்கே ரூ. 263 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் ஒன்று, திறக்கப்பட்ட 29 நாள்களில் இடிந்து விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்  மாவட்டத்தில், கண்டகி ஆற்றின் குறுக்கே ரூ.263 கோடி செலவில் கட்டப்பட்டது, சட்டர்காட் பாலம். இது கோபால்கஞ்ச் மற்றும் கிழக்கு சாம்பரன் ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட பயணத் தொலைவைக் குறைக்கும் நோக்கில் கட்டப்பட்டது. எட்டு வருடங்களாக நடைபெற்ற கட்டுமானப் பணி கடந்த மாதத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ் குமார்  கடந்த ஜூன் 16 - ம் தேதி பாலத்தைத் திறந்துவைத்தார். இதைப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

தென்மேற்குப் பருவமழை வடமாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. மழை, வெள்ளம் ஏற்படும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மழையால் கண்டகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சட்டர்காட் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பாலம் திறக்கப்பட்டு ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் இடிந்து விழுந்திருக்கும் சம்பவத்தால் மாநில முதல் அமைச்சரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் டாக்டர் மதன் மோகன், "ஜூன் 16 ம் தேதி திறக்கப்பட்ட பாலம் ஜூலை 15 - ம் தேதி இடிந்து விழுந்துள்ளது. இந்த முறையும் பழியை அப்பாவி எலிகள் மீது போடாதீர்கள்" என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதற்கு முன் 2017 ம் ஆண்டு ஆற்றுப் பாலங்கள் இடிந்த போது நித்திஷ் குமாரின் கேபினட் அமைச்சர் ஒருவர், "எலிகள் பாலத்துக்கு அடியில் குழி தோண்டி ஓட்டைப் போட்டு, அடித்தளங்ளை பலவீனப்படுத்துகின்றன. அதனால் தான் பாலங்கள் இடிந்து விழுகின்றன. அதனால் தான் ஆற்றிலிருந்து வெள்ளப்பெருக்கும்  ஏற்படுகிறது" என்று தெரிவித்திருந்தார். இதே போன்று மதுபானங்கள் காணாமல் போனபோதும் பீகார் காவல் அதிகாரிகள் எலி மீது பழியைப் போட்டுத் தப்பிக்கொண்டனர்.

இந்த நிலையில், திறந்து வைத்த ஒரு மாதத்துக்குள் இடிந்து விழுந்த பாலம் நிதிஷ்குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments