'இந்தியாவுடன் அப்படியொரு ஒப்பந்தத்தையே  மேற்கொள்ளவில்லை' - சாபகர் துறைமுக ரயில் திட்டம் குறித்து ஈரான் டுவிஸ்ட்!

0 8557
சாபகர் ரயில் பாதைத் திட்டம்

ரானின் சாபகர் துறைமுகத்திலிருந்து ஆப்கனின் எல்லையில் உள்ள ஜாஹேடான் வரை ரயில் பாதை அமைக்க இந்தியா ஈரானுடன் ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்துவிட்டதாக வெளியான தகவலை மறுத்திருக்கும் ஈரான், “நாங்கள் அப்படியொரு ஒப்பந்தத்தை இந்தியாவுடன் போடவே இல்லை’ என்று கூறி உள்ளது.

இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே 2016 - ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா 1.6 பில்லியன் டாலர் திட்ட மதிப்பீட்டில் சாபகர் துறைமுகத்திலிருந்து ஆப்கனின் எல்லையில் உள்ள ஜாஹேடான் வரை 628 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க வழிவகை செய்தது. அமெரிக்கா ஈரான் மீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடையால் இந்தியாவால் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. நான்கு வருடங்கள் காத்திருந்த ஈரான், “நாங்களே பார்த்துக்கொள்கிறோம்’ என்று கூறி இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகச் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஈரானில் உள்ள இந்தியத் தூதுவர், “சாபகர் - ஜாஹேடன் ரயில் பாதைத் திட்டத்தை முடிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. ஒப்பந்தம் ரத்துசெய்யப்படவில்லை" என்று கருத்து கூறியிருந்தது.

ஆனால், இந்த விவகாரம் குறித்து ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பின் துணைத் தலைவர் ஃபர்ஹாத் மோண்டேசர், “ஈரான் ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. சாபகர் -  ஜாஹேடான் ரயில் பாதை குறித்து இந்தியாவுடன் எந்த ஒப்பந்தத்தையும் ஈரான் மேற்கொள்ளவில்லை. சாபகர் துறைமுகத்தில் முதலீடு செய்வதற்காக இந்தியாவுடன் இரண்டு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டோம். முதல் ஒப்பந்தம் துறைமுகத்துக்குத் தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் தொடர்புடையது. இரண்டாவது இந்தியா முதலீடு செய்யும் 150 மில்லியன் டாலர் தொடர்புடையது” என்று கூறி உள்ளார்.

சீனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்துவிட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்படியொரு ஒப்பந்தமே போடவில்லை என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஈரான்!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments