கொரோனா சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டவர் எங்கே? தேடும் குடும்பத்தினர்..!

0 4596

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதியவரை ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற மருத்துவ குழுவினர், மருத்துவமனை வளாகத்திலேயே இறக்கிவிட்டு சென்றதால் மாயமான அவரை, ஒரு மாதத்திற்கும் மேலாக அவரது குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.

சென்னை ஆலந்தூரில் வசித்த 74 வயதான ஆதிகேசவன் தான் மாயமானவர். தனது 103 வயதான தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவருக்கு அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த மாதம் 11ம் தேதி 162 வார்டு மாநகராட்சி ஊழியர்கள் இவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வீட்டு தனிமையில் இருந்த குடும்பத்தினர், செல்போன் பயன்படுத்தாத முதியவர் ஆதிகேசவனை தொடர்பு கொள்ள முடியாததால் எந்த மருத்துவமனையில் இருக்கிறார் என தெரிந்து கொள்ள முடியவில்லை. ஓரிரு நாட்களில் அவரது மகன்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்ததில் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆலந்தூர் மண்டல அதிகாரிகளோ, கீழ்பாக்கம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி அனுப்பிவிட்டனர். மருத்துவமனையில் அப்படி யாரும் இங்கு அனுமதிக்கப்படவில்லை என மறுத்ததால் அவரது குடும்பத்தினர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

போலீஸ் தரப்பிலும் அலைகழிக்க, உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து விசாரணையை தொடர்ந்த போலீசார், வழக்கு பதிந்து கடந்த மாதம் 30-ந் தேதி ஆதிகேசவனை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் அங்கு விட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் அன்றைய தேதியின் சிசிடிவியை ஆய்வு செய்ததில், அவரை ஆம்புலன்ஸில் இருந்து இறக்கிவிட்டு செல்வதும், அதன் பிறகு அவரை யாரும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் சுமார் 8 மணி நேரம் அங்கேயே காத்திருக்கும் காட்சிகள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தான் அவர் மாயமாகியிருப்பது உறுதியாகிருப்பதால் பூக்கடை போலீசார் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு பக்கம் ஆதிகேசவனின் மூன்று மகன்களும், உறவினர்களும் தினமும் ஒவ்வொரு பகுதியாக அவரை தேடி அலைகின்றனர். கொரோனா நோயோடு போனவர் மீண்டு வருவார் என கடந்த 35 நாட்களாக காத்திருக்கிறது அவரது குடும்பம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments